உலகளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரத்த சர்க்கரை அளவை இயற்கையாகக் கட்டுக்குள் வைக்க உதவும் ஒரு எளிய ரகசியத்தை அறிவியல் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. நாம் சாதாரணமாகப் பார்க்கும் மா இலைகள், டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் தன்மை கொண்டவை என்று, PubMed Central மற்றும் அமெரிக்காவின் தேசிய பயோடெக்னாலஜி ஆய்வகம் உள்ளிட்ட அறிவியல் இதழ்களின் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மா இலைகளில் உள்ள மந்திரம் :
மா இலைகளில் அதிக அளவில் உள்ள ‘மாங்கிஃபெரின்’ (Mangiferin) என்ற சக்திவாய்ந்த வேதிப்பொருள் தான், நீரிழிவு எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்தச் சத்து, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகளில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
விலங்குகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், மா இலைச் சாறுகளை உட்கொள்வது, உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைக்கவும், உடலில் குளுக்கோஸைத் தாங்கும் திறனை (Insulin Sensitivity) மேம்படுத்தவும் உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மாங்கிஃபெரின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
மா இலைச் சாறுகள், கணையத்தில் உள்ள பீட்டா செல்களைப் பாதுகாத்து, இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது என்றும் சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், மா இலைகளில் உள்ள மாங்கிஃபெரின் மற்றும் அதன் சாறுகள், கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தில் ஈடுபடும் ஆல்பா-அமைலேஸ் மற்றும் ஆல்பா-குளுக்கோசிடேஸ் போன்ற முக்கியமான என்சைம்களைத் தடுக்கின்றன. இதன் விளைவாக, குடலில் சர்க்கரைகள் உறிஞ்சப்படுவது குறைகிறது.
கொழுப்பை குறைக்கும் கூடுதல் நன்மை :
மா இலைகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், உடலில் உள்ள கொழுப்புச் சத்து மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பதிலும் உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உடல் பருமனைத் தடுக்கவும் இது உதவுகிறது.
எச்சரிக்கை அவசியம் :
மா இலைகள் நீரிழிவு நோய்க்கு உதவக்கூடும் என்று ஆய்வுகள் நிரூபித்தாலும், சர்க்கரை நோயாளிகள் இதனை சாறாகவோ, அரைத்தோ அல்லது அப்படியே மென்றோ உண்ண நினைத்தால், ஏற்கனவே எடுத்துக் கொள்ளும் மருந்துகளை நிறுத்தாமல், கட்டாயம் ஒருமுறை மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம்.
Read More : பிறக்கும் குழந்தை அழகாக இருக்க வேண்டுமா..? கர்ப்பிணிகளே இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க..!!



