பொதுவாக, கொட்டாவி வருவது சோர்வின் அல்லது தூக்கத்தின் அறிகுறியாகவே நம்மில் பலரால் கருதப்படுகிறது. ஆனால், சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சிகள், எந்தவொரு தெளிவான காரணமும் இல்லாமல் அடிக்கடி கொட்டாவி விடுவது என்பது, உடலில் உள்ள சில முக்கிய நரம்பியல் அல்லது வளர்சிதை மாற்றக் கோளாறுகளை சுட்டிக்காட்டலாம் என்று எச்சரிக்கின்றன. இந்தக் காரணங்களைக் கருத்தில் கொள்ளாமல் புறக்கணிப்பது, சில நேரங்களில் ஆபத்தான உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.
உதாரணமாக, ‘மைக்ரோநியூரோகிராபி’ ஆய்வு மூலம், நாம் கொட்டாவி விடும்போது, உடல் ஓய்வு நிலைக்குச் செல்ல உதவும் பேராசிம்பேதடிக் நரம்பு செயல்பாடு அதிகரிக்கிறது என்றும், தசைகளின் செயல்பாடு குறைகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, கொட்டாவி என்பது உடல் ஓய்வை கோரும் ஒரு சமிக்ஞையாக இருக்கலாம்.
நரம்பியல் கோளாறுகள்: அடிக்கடி கொட்டாவி வருவது, சில நேரங்களில் கால்-கை வலிப்பு, பக்கவாதம் அல்லது முன் பகுதியின் நரம்பு பாதிப்பு போன்ற தீவிரமான மூளை நிலைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். சில வேளைகளில், கொட்டாவி ஒரு வகை வலிப்புத் தாக்கத்தின் ஆரம்ப வடிவமாகவும் இருக்கக்கூடும்.
நரம்பு மண்டல கோளாறுகள்: இதயத்துடிப்பு, சுவாசம் போன்ற தன்னிச்சையான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் தன்னியக்க நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் சமநிலையற்ற தன்மை (சிம்பேதடிக் – பேராசிம்பேதடிக் சமநிலை சீர்குலைவு) ஏற்பட்டால், அதிகப்படியான கொட்டாவி ஏற்படும்.
மூளை வெப்பநிலை ஏற்றத்தாழ்வு: மூளையின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் கொட்டாவிக்கு ஒரு பங்கு இருப்பதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பக்கவாதம் அல்லது மூளைக் காயங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், மூளையின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க முடியாமல் கொட்டாவி வருவது அதிகரிக்கலாம்.
வளர்சிதை மாற்ற குறைபாடுகள்: மூளையின் செயல்பாடு மற்றும் உணர்ச்சி நிலைகளைக் கட்டுப்படுத்தும் டோபமைன் போன்ற நரம்பு ரசாயனங்களின் அளவில் ஏற்படும் மாற்றங்களும் அதிக கொட்டாவிக்குக் காரணமாக இருக்கலாம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
எப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்..?
ஆய்வுகளின்படி, 15 நிமிடத்திற்குள் 3 முறைக்கு மேல் கொட்டாவி வந்தால் அது அதிகப்படியான கொட்டாவியாக கருதப்படலாம். சோர்வு இல்லாத போதும், தொடர்ந்து அடிக்கடி கொட்டாவி வருவதுடன், தலைச்சுற்றல், மனச்சோர்வு, கை கால்களில் பலவீனம் அல்லது அறிவாற்றல் மாற்றங்கள் ஆகியவை இருந்தால், இது ஒரு தீவிரமான உடல்நலப் பிரச்சனையின் அச்சுறுத்தலாக இருக்கலாம். எனவே, அத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.



