விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஒரு தலைமை காவலர் (ஏட்டு), புகார் கொடுக்க வந்த இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இச்சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஒன்றில் புகார் அளிக்க இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அந்த காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த காவலருக்கும், புகார் அளிக்க வந்த அந்தப் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த தொடர்பு நாளடைவில் நெருக்கமாகவே, ஏட்டு அந்தப் பெண்ணின் வீட்டுக்கு ரகசியமாகச் செல்ல தொடங்கியுள்ளார். சம்பவத்தன்று, ஏட்டு அந்தப் பெண்ணின் வீட்டில் அவருடன் உல்லாசமாக இருந்தபோது, பெண்ணின் கணவர் எதிர்பாராதவிதமாக வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, இருவரையும் அவர் கையும் களவுமாகப் பிடித்தபோது, அங்கிருந்து காவலர் உடனடியாக தப்பிச் சென்றதாக தெரிகிறது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் பெண்ணின் கணவர் சேர்ந்து, ஆத்திரத்தில் ஏட்டுவின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ஆமத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், சேதப்படுத்தப்பட்ட காவலரின் இருசக்கர வாகனத்தை மீட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உடனடியாகச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டார். காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தனிப்பட்ட ஒழுக்கமீறலில் ஈடுபட்ட தலைமைக் காவலர் மீது நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட ஏட்டுவை, அவர் பணியாற்றி வந்த மேற்கு காவல் நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்த குற்றச்சாட்டில் ஒரு போலீஸ் ஏட்டு சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



