நவீன நாகரீக வாழ்க்கை மின்னல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும், உலகின் சில மூலைகளில் இன்னும் மிகப் பழம்பெரும் மரபுகளைப் பற்றிக்கொண்டு வாழ்ந்து வரும் பழங்குடி சமூகங்கள் உள்ளன. வெளி உலகத்தின் வாழ்க்கை முறையையும் நாகரீக விதிகளையும் ஏற்றுக்கொள்ளாமல், தங்கள் முன்னோர்களின் சட்டங்கள், நம்பிக்கைகள், கலாச்சாரம், மதச் சடங்குகளையே கடைப்பிடித்து வாழ்கின்றனர்.
அந்த வகையில் யனோமாமி பழங்குடியினரின் வழக்கம் உலக நாகரீக சமுதாயத்தை அதிர்ச்சியடையச் செய்யும் விதமாக அமைகின்றன. சிஎன்என் நியூஸ் 18 வெளியிட்டிருந்த செய்தியின்படி, மரணத்திற்கு பிறகு ஒருவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால், அவர்களது உடல் எரிக்கப்பட்டு, இறந்தவர்களின் உறவினர்கள் அதனை சாப்பிடவேண்டும் என்பது யனோமாமி பழங்குடியினரின் வழக்கமாம். யாராவது இறந்துவிட்டால், அவர்களது சொந்தக்காரர்கள் எல்லாம் கூடி, அழுது பாட்டு பாடி துக்கத்தை வெளிப்படுத்துவார்கள். அதற்கு பிறகு இறந்தவர்களின் முகங்களில் லேசாக மண்ணை தேய்த்து, பிணங்களை எரித்துவிடுவார்கள்.
அடுத்ததாக, எரிந்த உடல்களின் மிச்சத்திலுள்ள சாம்பல், எலும்புகளை வைத்து, வாழைப்பழத்துடன் சேர்த்து, சூப் போல சமைத்து குடிப்பார்கள். இப்படி சூப் வைத்து குடித்துவிட்டால், நெருக்கமானவர்கள் தங்களை விட்டு பிரியவில்லை, தங்களுடனேயே இருப்பார்கள் என்று நம்புகிறார்கள். இயற்கை மரணம் என்றால் அனைவருமே அந்த சூப்பை குடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பெண்கள் மட்டும் தான் அந்த பிணங்களை சாப்பிடவேண்டுமாம்.
இணையம், தொழில்நுட்பம், நகர வாழ்க்கை எல்லாம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் உலகில், யனோமாமி பழங்குடி மக்கள் இன்னும் இயற்கை மையமிட்ட வாழ்வைத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உடல் அழகு, பாரம்பரிய ஆடை, முக அலங்காரம், தனித்துவமான வாழ்க்கைமுறை இவை அனைத்தும் நவீன மனிதனை வியப்பில் ஆழ்த்துகின்றன.



