இந்திய சமையலில் இஞ்சி பூண்டு விழுது என்பது பிரியாணி, புலாவ், அசைவ உணவுகள் என பலவற்றுக்கு இன்றியமையாத ஒரு பகுதியாகும். இந்த விழுதின் உண்மையான நோக்கம் சுவை மற்றும் வாசனைக்கு மட்டுமல்ல, அதன் பின்னால் ஏராளமான பாரம்பரிய ஆரோக்கிய ரகசியங்கள் மறைந்துள்ளன என்று உணவு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இஞ்சி பூண்டு விழுதை ரெடிமேடாக பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் வீட்டிலேயே தயாரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து சமையல் நிபுணர் செஃப் தீனா விளக்கம் அளித்துள்ளார்.
மருத்துவப் பலன்கள் கொண்ட இஞ்சி பூண்டு :
இஞ்சி மற்றும் பூண்டு காலங்காலமாக நம் உணவில் பயன்படுத்தப்படுவதற்கு முக்கியமான சுகாதார காரணங்கள் உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி: இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் (Gingerol) என்னும் மூலக்கூறும், பூண்டில் உள்ள அல்லிசின் (Allicin) என்னும் மூலக்கூறும் இயற்கையாகவே வெளியாகி, மிகச் சிறந்த ஆன்டி ஆக்சிடண்ட்டாக (Antioxidant) செயல்பட்டு, உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
சீரண சக்தி: இஞ்சி செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து, ஒட்டுமொத்த ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும், சளி போன்ற பருவ காலத் தொற்றுகளைச் சரிசெய்யவும் உதவுகிறது.
கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு: பூண்டு, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஒரு மிகச்சிறந்த இயற்கை உணவு. தினமும் நம் உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும்.
ரெடிமேட் விழுதுகளின் ஆபத்துகள் :
வீட்டில் இஞ்சி பூண்டு விழுது அரைப்பது சற்று சிரமமான வேலை என்பதால், பலரும் கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் விழுதை பயன்படுத்துகின்றனர்.
ஆரோக்கியப் பண்புகள் அழிவு: கடைகளில் விற்கப்படும் விழுதுகளில், அதிகப்படியான எண்ணெய், உப்பு மற்றும் கெமிக்கல் பதப்படுத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, இஞ்சி மற்றும் பூண்டில் இயற்கையாக இருக்கும் அல்லிசின் போன்ற மருத்துவப் பண்புகளை அழித்து விடுகின்றன.
தரமற்ற கலப்பு: ரெடிமேட் விழுதுகளில் அதிக விலை காரணமாக போதுமான அளவு இஞ்சி மற்றும் பூண்டு பயன்படுத்தப்படாமல், மைதா மற்றும் பிற குறைந்த தரப் பொருட்கள் கலக்கப்படுகின்றன.
சுகாதாரச் சிக்கல்கள்: இந்த வேதிப்பொருட்கள் மற்றும் கலப்படங்களால், ஜீரணக் கோளாறுகள், ஃபுட் பாய்சன், மற்றும் உடலில் அழற்சி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வீட்டிலேயே செய்வதன் முழுப் பலன் :
மாறாக, வீட்டிலேயே இஞ்சி பூண்டு விழுது தயாரிக்கும் போது, நாம் புதிய இஞ்சி மற்றும் பூண்டை பயன்படுத்துவோம். பதப்படுத்துவதற்கு செயற்கை கெமிக்கல்கள், அதிக உப்பு, அல்லது எண்ணெய் எதையும் பயன்படுத்த மாட்டோம்.
இதன் விளைவாக இஞ்சி மற்றும் பூண்டின் அசல் சுவையும், மணமும் கிடைப்பதோடு, அதில் உள்ள ஜிஞ்சரால், அல்லிசின் போன்ற மருத்துவக் குணங்கள் முழுமையாக கிடைத்து, சமைக்கும் உணவு ஆரோக்கியமானதாக மாறுகிறது.
செஃப் தீனாவின் எளிய தீர்வு :
ரெடிமேட் விழுதில் உள்ள பிரச்சனைகள், உணவின் சுவையையும், ஆரோக்கியப் பலனையும் முழுமையாக கெடுத்துவிடும் என்று செஃப் தீனா எச்சரித்துள்ளார். தினமும் விழுது செய்யச் சிரமப்படுபவர்கள் “வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கிடைக்கும்போது, தேவையான இஞ்சி பூண்டுகளை உரித்து, அரைத்து, ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள்” என்று தீனா கூறியுள்ளார்.
அதேபோல், ஒரு வாரத்திற்கு மேல் விழுதுகளை பயன்படுத்த வேண்டாம். ஒரு வாரத்திற்கு மேல் வைத்தால் அதன் சுவையும், ஆரோக்கிய பலன்களும் குறைந்து விடும். எனவே, இஞ்சி பூண்டு விழுதின் உண்மையான நோக்கமே அதன் மருத்துவ குணங்கள் தான். அந்த குணங்களே கெடும் வகையில் இனியும் ரெடிமேட் விழுதைப் பயன்படுத்தாமல், நம் ஆரோக்கியத்திற்காக கொஞ்சம் சிரமம் பார்ப்பது அவசியம் என்று செஃப் தீனா வலியுறுத்தியுள்ளார்.
Read More : சிவனின் அருளைப் பெற்று ராஜயோகத்துடன் வாழ வேண்டுமா..? இந்த பிரதோஷ நாளில் இப்படி வழிபடுங்க..!!



