இரண்டு சிகரெட் மட்டுமே தான் புகைக்கிறேன் என்று நினைத்தாலும், அதனால் ஏற்படும் ஆபத்தில் இருந்து நீங்கள் தப்ப முடியாது. புதிய ஆய்வு ஒன்று இதை தெளிவாக காட்டுகிறது.
ஆய்வு என்ன சொல்கிறது?
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 3,00,000-க்கும் மேற்பட்ட வயது வந்தோரின் புகைப்பழக்கத்தை 20 ஆண்டுகளுக்கு மேல் கண்காணித்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
தினமும் மட்டும் இரண்டு சிகரெட் புகைத்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு:
எந்த காரணத்தினாலும் மரணிக்கும் ஆபத்து 60% அதிகம்
இதய நோய் ஏற்படும் ஆபத்து 50% அதிகம்
இந்த ஆய்வு PLOS Medicine எனும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புகையிலை மற்றும் இதய நோயின் தொடர்பு என்ன?
புகைபிடிப்பது ரத்த நாளங்களின் (blood vessels) உள் படலத்தை சேதப்படுத்துகிறது. இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு உருவாக வழிவகுக்கிறது.. மேலும் புகைபிட்ப்பதால் இதய துடிப்பில் கோளாறு ஏற்படலாம்.. புகைபிடிப்பது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதனால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. எனவே ஒரு நாள் இரண்டு சிகரெட் கூட இதய நோய் மற்றும் மரண ஆபத்தை பெரிதும் அதிகரிக்கிறது..” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்…
புகைப்பது இதயத்துக்கு எப்படி கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது?
புகைபிடிப்பதால், ரத்த அழுத்தம் (Blood Pressure) அதிகரிக்கும், இதய துடிப்பு (Heart Rate) வேகமாகும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும்.. இவை அனைத்தும் இதயத்திற்கு கூடுதல் வேலைச்சுமையை ஏற்படுத்துகிறது. இதனால் இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்படலாம்.. இதயம் அதிக அழுத்தத்தில் செயல்பட வேண்டிய நிலை ஏற்படும்.. இவை அனைத்தும் நேரடியாக இதய நோய் அபாயத்தை உயர்த்தும் முக்கிய காரணிகள்.
சிகரெட் புகைப்பதை நிறுத்தினால் உடல்நலம் திரும்புமா?
சிகரெட் எண்ணிக்கையை குறைப்பது மட்டும், உடல் பெற்ற சேதத்தை முழுமையாக மாற்றுவதற்கு போதுமானதாக இருக்காது.. புகைபிடிப்பதை தொடரும் வரை எந்த அளவிலும் ஆபத்து அதிகம். புகைப்பழக்கத்தை நிறுத்தினாலும், 20 ஆண்டுகளுக்குப் பிறகும் இதய நோய் அபாயம் அதிகமே இருந்து கொண்டே இருக்கிறது. இது புகைபிடிப்பால் ஏற்பட்ட உடல் சேதம் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துவதைக் காட்டுகிறது.
உலகளாவிய புகைப்பழக்கப் புள்ளிவிவரங்கள்
1965 – 42% பேர் புகைபிடித்தனர்
2022 – 12% பேர் மட்டுமே புகைபிடிக்கிறார்கள்
ஆனால் ஒரு நாளில் 15 சிகரெட்டுக்கு குறைவாக புகைப்பவர்களின் எண்ணிக்கை
85% அதிகரித்துள்ளது.. இதன் பொருள் குறைவாக புகைபிடிப்பது பாதுகாப்பு இல்லை என மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
புகைப்பழக்கத்தை நிறுத்தியால் உடலுக்கு எவ்வாறு பலன்கள் கிடைக்கும்?
நிபுணர்கள் புகைப்பழக்கத்தை நிறுத்திய முதல் 10 ஆண்டுகளில் உடல் ஆரோக்கியத்தில் மிகப் பெரிய, நேர்மறையான மாற்றங்கள் பார்க்கப்படும். ஆனால், ஒருபோதும் புகைக்காத ஒருவரின் உடல்நிலை மட்டத்தை அடைய உடலுக்கு இன்னும் கூடுதல் நேரம் தேவைப்படும்.
புகைப்பதை நிறுத்துவது எப்படி?
புகைப்பதை நிறுத்த முயல்பவர்கள் பலர் இருந்தாலும் முதல் முயற்சியிலேயே அதை நிறுத்துவது மிகவும் அரிது. குறிப்பாக உதவி அல்லது திட்டமிடல் இல்லாமல் முயற்சித்தால் அது இன்னும் கடினம்.
புகைப்பழக்கத்திலிருந்து முழுமையாக விலகச் சிறந்த வழிகள்:
நிகோடின் மாற்று சிகிச்சை (Nicotine Replacement Therapy – NRT)
நிகோடின் பேட்ச்
நிகோடின் கம்
ஸ்ப்ரே
இவை சிகரெட்டுக்கான ஆசையை குறைக்க உதவும்.
தூண்டுதல்களை கண்டறிந்து கட்டுப்படுத்துதல்
உங்களுக்கு சிகரெட் பிடிக்க தூண்டும் காரணிகளை கண்டுபிடிக்கவும்:
மன அழுத்தம், தனிமை, காபி/மது, குறிப்பிட்ட இடங்கள், புகைபிடிக்கும் நண்பர்கள் இவற்றில் எது புகைப் பிடிக்கும் காரணி என்பதை கண்டுபிடித்து அவற்றை தவிர்க்கும் வழிகளைப் பின்பற்றுங்கள்.
நிகோடின் ஆசையை மென்று கடக்க – மாற்று வழிகள்
சிகரெட்டிற்குப் பதிலாக சர்க்கரை இல்லா கம், கேரட் துண்டுகள், நட்ஸ், சன்ஃப்ளவர் விதைகள், இவை ஆசையை தற்காலிகமாக தடுக்க உதவும்.
உடற்பயிற்சி – மனதை மாற்ற உதவும் சிறந்த வழி
புகைப்பதை நிறுத்தும் காலத்தில்:
கோபம், எரிச்சல், பதட்டம், கவலை இதுபோன்ற உணர்வுகள் வரலாம். இவற்றை சமாளிப்பதில் உடற்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு பிடித்த எளிய செயல்களைத் தேர்வு செய்யலாம்.. வேகமான நடை, யோகா, சைக்கிள், நீச்சல், ஜிம், உடற்பயிற்சி மனதை திசை திருப்பி, மன அழுத்தத்தையும் ஆசையையும் குறைக்கும்.



