உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது எதிர்கால கணிப்புகளை மேலும் வலுப்படுத்தி வருகிறார். சமீபத்தில் டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சம்பள திட்டத்தை பெற்றுள்ள அவர் வரவிருக்கும் காலத்தில் “பணம் என்பது விரைவில் அர்த்தமற்றதாக மாறிவிடும்” என்று தெரிவித்தார்.
அமெரிக்கா-சவுதி முதலீட்டு மன்றம் (US-Saudi Investment Forum) நேற்று வாஷிங்டன் DC-யில் நடைபெற்றபோது, எலான் மஸ்க் சில நிமிடங்கள் குறுகிய நேர பேட்டிக்காக மேடைக்கு வர அழைக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சவுதி அரேபியாவின் கிரௌன் பிரின்ஸ் முகமது பின் சல்மானுக்காக நடத்திய வெள்ளை இல்ல விருந்து முடிந்த உடன் நடந்தது. அங்கு மஸ்க் மற்றும் ட்ரம்ப் சில விநாடிகள் சந்தித்துக் கொண்ட அந்தச் சிறிய தருணமும் ஊடகங்களில் கவனம் பெற்றது.
எலான் மஸ்க் பார்வையில், ஏழ்மையை முற்றிலும் அழிப்பதற்கான தீர்வு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டுகள் தான். பெரும்பாலோருக்கு இது ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்தாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த விஷயத்தில் அவர் நீண்ட காலமாக கூறி வந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவரான மஸ்க், அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் “வேலை செய்தல் விருப்பத்துக்குட்பட்ட ஒன்றாகி விடும்” என்று கணித்தார். இது தான் “நீண்ட கால” எதிர்காலத்தின் படம் என்றும் அவர் விளக்கினார். இந்த பெரிய கூற்று, ஆரம்பத்தில் தயக்கத்துடன் இருந்தாலும், இறுதியில் மன்றத்தில் இருந்தவர்களிடமிருந்து பெரிய கைதட்டலை பெற்றது.
AI மற்றும் ரோபோட்டிக்ஸ் தொடர்ந்து முன்னேறும் என்பதில் உறுதியான நம்பிக்கை இருப்பதாக எலான் மஸ்க் கூறினார். இத்தகைய முன்னேற்றம் ஒரு கட்டத்தில் “பணத்தை அர்த்தமற்றதாக” மாற்றக்கூடும்.. நாணயம் எனப்படும் பணம் பயனற்றதாகிவிடும்,” என்றும், AI மற்றும் ரோபோட்டுகள் “ஏழ்மையை முழுமையாக நீக்கிவிடும்” என்றும் அவர் தெரிவித்தார்..
ரோபோட்டுகள் குறித்து மஸ்க் பல ஆண்டுகளாகவே மிகுந்த உயர்வான கனவை வைத்திருக்கிறார். எதிர்காலத்தில் அனைத்து வேலைகளையும் Optimus ரோபோட்டுகள் செய்யும் நிலை உருவாகும், மனித உழைப்பு குறைந்துவிடலாம் என்றாலும், அது பொருளாதாரத்தை மாற்றும் என்று எலான் மஸ்க் நம்புகிறார். Tesla ஏற்கனவே Optimus-ஐ சில சிறு செயல்பாடுகளில் பயன்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளது.
இந்த மாதம் Tesla பங்குதாரர் கூட்டத்தில் பேசிய எலான் மஸ்க்.“ ஏழ்மையை ஒழிப்பது, எல்லோருக்கும் சிறந்த மருத்துவ சேவை கொடுப்பது போன்ற விஷயங்கள் பற்றி மக்கள் எப்போதும் பேசுகிறார்கள்..” என்று தெரிவித்தார்..
எலான் மஸ்க் Tesla-வின் மனித வடிவ ரோபோட்டுகள் (Optimus) குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார். இந்த ரோபோட்டுகள் உலக பொருளாதாரத்தை பத்து மடங்கு அல்லது நூறு மடங்கு வளர்க்கக்கூடியவை என்றும் அவர் கூறினார். எதிர்காலத்தில் “வேலை செய்ய வேண்டிய அவசியமே இருக்காது” என்பதற்கான முக்கிய காரணம் Optimus தான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நாளில் தான், மஸ்க் பல ஆண்டுகளாக விவாதத்தில் இருந்த 1 டிரில்லியன் டாலர் சம்பள தொகுப்புக்கு இறுதியாக பங்குதாரர்கள் அங்கீகாரம் அளித்திருந்தார்கள் என்பது ஐரோனியாக அமைந்தது.
“ஒரு ‘நல்ல’ சூழலில், அனைவருக்கும் பொதுவான உயர்ந்த வருமான நிலை (universal high income) கிடைக்கும். மக்கள் விரும்பும் எந்த பொருளையும் எந்த சேவையையும் எளிதில் பெற முடியும். ஆனால் இதற்கிடையில் பெரிய மாற்றங்களும் அதிர்ச்சிகளும் இருக்கும் என்றும் மஸ்க் எச்சரித்தார்.
எலான் மஸ்கின் “பணம் விரைவில் தொடர்பற்றதாகிவிடும்” என்ற கூற்று சமூக ஊடகங்களில் கலவையான பெரும்பாலும் விமர்சன கருத்துகளை உருவாக்கியது. ஒரு பயனர் “டிரில்லியன் டாலர் சம்பளம் பெற்றவங்க தான் பணம் தேவையில்லைனு சொல்றாரு!” என்று பதிவிட்டுள்ளார்..
மற்றொருவர் “தன் செல்வத்தை வரம்பற்ற அளவுக்கு அதிகரிக்கவே வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவர் ‘பணம் அவசியமில்லை’ என்று சொல்கிறார்.”
மூன்றாவது பயனர் “ரோபோட்டுகளைக் கட்டுப்படுத்துவது யார்? எல்லோரும் அவரின் கருணைக்கே அடிமையாகிவிடுவோமா?” என்று பதிவிட்டுள்ளார்..



