2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெல்லும் என்றும், கூட்டணி அமைச்சரவை அமையும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
2026 சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தேமுதிகவை பொருத்தவரை இதுவரையில் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் நாங்கள் யாருடன் கூட்டணியில் இணைவோம் என்ற அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அறிவித்தார். இதற்கிடையே ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சார பயணத்தின் ஒருபகுதியாக பழனிக்கு வருகை தந்த பிரேமலதா விஜயகாந்திற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பழனி பேருந்துநிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் வாகனத்தில் நின்றபடி பிரேமலதா பேசினார்.
அவர் பேசுகையில், 2026 இல் தமிழக அரசியலில் மாய மந்திரம் நடக்கும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆட்சியில் அனைவருக்கும் பங்கும் கூட்டணி அமைச்சரவையும் இந்த தேர்தலில் உருவாகும் என்று அவர் பேசி உள்ளார். மேலும் மக்களும் தொண்டர்களும் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் திமுக நிறைவேற்றாத திட்டங்களை தேமுதிக கூட்டணி வெற்றி பெற்று அனைத்து பணிகளையும் செய்யும்.
தொடர்ந்து ஜனவரி 9ம்தேதி கடலூரில் நடக்கும் மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமைய உள்ளது. தமிழகத்தின் டாப் டென் மாநாடு என கூகுளில் தேடிப் பார்த்தால் மதுரையில் கேப்டன் நடத்திய தேமுதிக மாநாடு. அதேபோல முதல் 5 இடங்களும் தேமுதிக மாநாடு தான் இருக்கும். இந்த மாநாட்டின் வெற்றிதான் 2026 தேர்தல் வெற்றியாக அமையும்” என்றார். தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை என்று அவர் கூறியுள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.



