குழந்தைகளின் எதிர்கால கல்வி, திருமணம் போன்ற நீண்ட கால செலவுகளுக்காக பாதுகாப்பான மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டத்தை தேடும் பெற்றோர்களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) திட்டம் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற திட்டம் என்பதால், முதலீட்டின் பாதுகாப்புக்கு 100% உத்தரவாதம் உண்டு. மேலும், பங்குச் சந்தை அபாயங்கள் இதில் இல்லாததால், சந்தையில் உள்ள சிறந்த நீண்ட கால முதலீடுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
அதிக வட்டி மற்றும் வரி விலக்கு சலுகை :
தற்போது, PPF திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.1% கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. இது பல வங்கிகளின் நிலையான வைப்பு நிதி (FD) திட்டங்களை விட அதிக வட்டியாகும். மேலும், இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது. முதலீடு செய்வது மிகவும் எளிது; ஆண்டுக்கு ஒருமுறை பெரிய தொகையாகவோ அல்லது மாதத் தவணைகளாகவோ இதில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தின் கால அளவு 15 ஆண்டுகள் ஆகும். 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், நீங்கள் கணக்கைத் தொடரலாம். முதலீடு செய்வதை நிறுத்தினாலும், உங்கள் கணக்கில் உள்ள பழைய இருப்புக்கு 7.1% வட்டி தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்.
ஓய்வூதியமாக மாற்றும் வழிமுறை :
PPF ஒரு சேமிப்புத் திட்டம் மட்டுமல்ல.. இதை சரியான முறையில் பயன்படுத்தினால், இது ஒரு சிறந்த ஓய்வூதிய திட்டமாகவும் செயல்படும்.
உதாரணம் 1 (குறைந்த முதலீடு) : நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகள் முடிவில் மொத்த முதலீடு ரூ.9 லட்சமாக இருக்கும். வட்டியுடன் உங்கள் கணக்கில் ரூ.16.27 லட்சம் இருக்கும். முதலீட்டை நிறுத்திய பிறகு, இந்தத் தொகைக்கான வட்டி மட்டுமே உங்களுக்கு மாதத்திற்கு சுமார் ரூ.9,628 ஓய்வூதிய வடிவில் கிடைக்கும்.
உதாரணம் 2 (அதிக முதலீடு) : அதேபோல், நீங்கள் 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 டெபாசிட் செய்தால், முதிர்வு காலத்தில் உங்கள் கணக்கில் ரூ.40.68 லட்சம் இருக்கும். இந்தத் தொகைக்கான வட்டி மட்டும் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ரூ.24,000 வரை கிடைக்கும். இதில் இருந்து வருடத்திற்கு ஒருமுறை உங்கள் தேவைக்கேற்ப அசலில் சிலவற்றைத் திரும்பப் பெறும் வசதியும் உண்டு.
இந்த திட்டத்தில் சேர விரும்பினால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது உங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகத்தில் கணக்கைத் திறக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ரூ.500 டெபாசிட் செய்வது கட்டாயமாகும்.
Read More : பைக்கின் பின் இருக்கை மட்டும் ஏன் உயரமாக இருக்கிறது தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்..!!



