உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் பழக்கம் தோன்றி சுமார் 2 கோடி ஆண்டுகள் ஆவதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
முத்தம் எவ்வாறு உருவானது என்பதை ஆராயும் ஒரு புதிய ஆய்வு , குரங்கு மூதாதையர்களும், நியாண்டர்தால் போன்ற ஆரம்பகால மனிதர்களும் தங்கள் நண்பர்கள் மற்றும் துணைகளுடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இந்த நடத்தை 21 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம்.
மனிதகுலத்தின் ஆரம்பகால முத்தங்கள் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபடோமியா மற்றும் பண்டைய எகிப்தில் பதிவு செய்யப்பட்டன, ஆனால் ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியரும் ஆக்ஸ்போர்டின் உயிரியல் துறையின் பரிணாம உயிரியலாளருமான மாடில்டா பிரிண்டில், முத்தம் ஒரு “பரிணாம புதிர்” என்று கூறினார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் புளோரிடா தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முத்தம் என்பது ஒரு இனத்துக்கு மட்டும் இல்லை என்று தெளிவுப்படுத்தி உள்ளனர். அதாவது முத்தமிடுதல் என்பது மனிதர்கள் இந்த உலகுக்கு வருவதற்கு முன்பே இருந்துள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி சிம்பன்சி குரங்குகள், போனோபோ குரங்குகள் போன்ற அனைத்தும் முத்தமிடுகின்றன.
மனிதர்கள் வருவதற்கு முன்பு மனிதர்களை போலவே இருக்கும் நியாண்டர்தால் என்ற இனம் வசித்துள்ளது. அந்த நியாண்டர் தால்களும் ஒன்றுக்கொன்று முத்தமிட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் நியாண்டர் தால்கள் வசிக்கும் காலத்திலேயே மனிதனும் தோன்றி விட்டதால் மனிதர்களும், நியாண்டர்தால்களும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியின் முடிவு தெரிவிக்கிறது. 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இந்த முத்தமானது பல பரிணாமங்களை தாண்டி இப்போதும் அன்பின் அடையாளமாக திகழ்கிறது.



