திருமணம் முற்றிலும் முறிவடைந்த நிலையிலும் விவாகரத்தை மறுப்பது துன்பத்தை அதிகரிக்கும்: உயர்நீதிமன்றம் கருத்து.!

marriage divorce 2167e762 eb0b 11e9 ae8a 39ff32977a8f

திருமண வாழ்வு முற்றிலும் முறிவடைந்தால், அதை விவாகரத்திற்கான காரணமாக இந்து திருமணச் சட்டத்தில் குறிப்பிடவில்லை என்றாலும், அத்தகைய தம்பதிகளின் திருமணத்தை கலைக்க மறுப்பது, அவர்களை தொடர்ந்த வலி மற்றும் வேதனையில் தள்ளுவதாகும், என மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.


நீதிபதிகள் விஷால் தாக்கட் மற்றும் பி.பி. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்றம் தன்னிடம் வருபவர்களின் நிஜ வாழ்க்கைச் சிக்கல்களையும் துன்பங்களையும் புறக்கணிக்க முடியாது எனக் குறிப்பிட்டது. திருமண வாழ்வு முழுமையாக முறிவடைவது ஒரு கொடுமை அல்லது துன்புறுத்தலாகவே கருதப்படும்..

நீதிமன்றம் மேலும் “ திருமண வாழ்வு திரும்ப முடியாத வகையில் முறிவடைந்த சூழலிலும் விவாகரத்து வழங்கப்படவில்லை என்றால், அது அந்த நபரை தொடர்ந்து வலி மற்றும் வேதனையில் தள்ளுவதாகும். இது ‘கொடுமை’ என்ற பொதுக் கருத்தின் கீழ் வரும் ஒரு வகை. திருமணம் முழுமையாக முறிந்து விட்டால், இரு தரப்பும் தினசரி மனவேதனை அனுபவிக்க வேண்டிய நிலை உருவாகிறது, ஏனெனில் அவர்கள் தங்களுக்கேற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்திலிருந்து விலக்கப்படுகிறார்கள்” என தெரிவித்தது..

2023 இல் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச், அரசியலமைப்பு பிரிவு 142 அடிப்படையில் திருமண வாழ்வு திரும்ப முடியாத முறையில் முறிவடைந்தால் உச்சநீதிமன்றம் நேரடியாக விவாகரத்து வழங்க முடியும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், அதே அதிகாரத்தை உயர்நீதிமன்றங்களுக்கு வழங்கவில்லை.

கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம், அலகாபாத் உயர்நீதிமன்றம், இந்து திருமணச் சட்டத்தில் உள்ள விவாகரத்து காரணங்களை காலத்திற்கேற்ற வகையில் திருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.

அதேபோல, 2023 செப்டம்பரில் டெல்லி உயர்நீதிமன்றமும், திருமண வாழ்வு திரும்ப முடியாத முறையில் முறிவடைந்தது (irretrievable breakdown) என்பதை விவாகரத்துக்கான காரணமாக சட்டம் அங்கீகரிக்காததால், தம்பதிகள் பல ஆண்டுகளாக வழக்குகளில் சிக்கிக்கொண்டு போராட வேண்டிய நிலை உருவாகிறது; ஏனெனில் அவர்களுக்கு அந்த உறவிலிருந்து வெளியேறும் சட்டப்பாதை கிடையாது என்ற கருத்தை தெரிவித்தது..

இந்த நிலையில் தற்போது மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றமும் இதே விவாதத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. ஒரு பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரிக்கும் போது இந்தக் கருத்தை முன்வைத்தது.

அந்தப் பெண் கொடுமை, விட்டுவிட்டு செல்வது/புறக்கணிப்பு ஆகிய காரணங்களின் அடிப்படையில் விவாகரத்தை கோரியிருந்தார். ஆனால் குடும்ப நீதிமன்றம் அதை மறுத்ததால், அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது அந்த இரண்டு மகள்களும் கணவரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

மனைவி, கணவர் வரதட்சணை கேட்டார், தன்னை அடித்து வன்முறை செய்தார் என்று குற்றம் சாட்டினார். அதற்கு பதிலாக, கணவர், விவாகரத்து பெறாமல், மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறினார். மேலும் மனைவியே குழந்தைகளை கொடுமை செய்தார் என்றும் கூறினார். எனினும் 2022 ஆம் ஆண்டு, குடும்ப நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்க மறுத்துவிட்டது..

உயர்நீதிமன்றத்தின் ஆய்வு

கோப்புகளை பரிசீலித்தபோது, இந்த தம்பதி இதற்கு முன் இணைந்து ஒரு விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தனர்; ஆனால் 2015ல் அவர்களுக்குள் ஏற்பட்ட சமரசத்தால் அது திரும்பப் பெறப்பட்டது. ஆனால் 2016ல், மனைவி வீட்டிலிருந்து துரத்தப்பட்டதாக கூறப்படுகிறது; அதன் பின்னர் தான் அவர் மற்றொருவரை திருமணம் செய்துகொண்டார்.

நீதிமன்றம் “மனைவி மற்றும் கணவர் இடையே திருமணம் முழுமையாக முறிவு அடைந்துள்ளது. மனைவியின் தவறான இரண்டாவது திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு மனுவை நிராகரிப்பது எந்த பயனும் தராது. ஆனால் முதல் திருமணம் இருந்தபடியே இரண்டாவது திருமணம் செய்தது மனைவியின் தவறு என்பது உண்மை.

அதே நேரத்தில், இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லுமா என்பதே இவ்வழக்கின் கேள்வி அல்ல என்றும் நீதிமன்றம் கூறியது. இவ்வழக்கின் முக்கிய பிரச்சனை — கணவர் மனைவியிடம் கொடுமை செய்தாரா? என்பதுதான் எனவும் தெரிவித்தது.

மேலும் “ திருமணம் முழுவதுமாக உடைந்த பிறகும், இருவருமே மனவலி அனுபவிக்கிறார்கள். மீண்டும் சேர்ந்து வாழ்வது இயலாத நிலையில் இருந்தும், ஒரு தரப்பு விவாகரத்திற்கு எதிராக வாதிடுவது — மற்றவரை வேதனைப்படுத்தி மகிழ்வது போன்ற கொடுமையாகும்.

கணவர், மனைவிக்கு தன் விருப்பப்படி, சுதந்திரமாக வாழ அனுமதிக்காமல், திருமணத்தை தொடர வேண்டாம் என்கிற நிலையில் இருந்தும், விவாகரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், இது கொடுமைக்குள் வருகிறது என்று உயர்நீதிமன்றம் முடிவு செய்தது. எனவே, மனைவிக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.

24.05.2002 அன்று செய்யப்பட்ட திருமணம் ரத்து செய்யப்படுகிறது,” என்று உயர்நீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பித்தது.. ஆனால், அதே நேரத்தில், மனைவிக்கு முதல் கணவரிடமிருந்து பராமரிப்பு தொகை (alimony) அல்லது எந்த சொத்து உரிமையும் கிடையாது என்றும் நீதிமன்றம் தீர்மானித்தது..

Read More : மாதம் ரூ.30,000 டெபாசிட் செய்தால்.. ரூ.21,43,091 கிடைக்கும்.. அரசு உத்தரவாதம்! சிறந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம்..!

RUPA

Next Post

“மிகவும் வருந்தினேன்..” கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Sat Nov 22 , 2025
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து, தமிழுக்கு வளம் சேர்த்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற திரு. ந. செகதீசன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், பேராசிரியர். […]
MK Stalin dmk 6

You May Like