பீகார் மாநிலத்தில் 40 பாலூட்டும் தாய்மார்களிடம் சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் மாதிரிகளில் அனைத்திலும் யுரேனியம் காணப்பட்டதாக உலகப் புகழ்பெற்ற Nature இதழில் வெளியான புதிய ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
அக்டோபர் 2021 முதல் ஜூலை 2024 வரை, பீகாரின் போஜ்பூர், சமஸ்திபூர், பெகுசராய், ககாரியா, கதிஹார், நாளந்தா ஆகிய 6 மாவட்டங்களில் 17 முதல் 35 வயதுக்குட்பட்ட தாய்மார்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அனைத்திலும் யுரேனியம் இருப்பது ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆய்வின் படி, அதிக யுரேனியம் கதிஹார் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) நிலத்தடி நீரில் 30 µg/L வரை மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால் இந்த ஆய்வில், தாய்ப்பாலுக்கான சர்வதேச பாதுகாப்பு வரம்பு இல்லாததால், கண்டறியப்பட்ட அளவு உடனடி தீங்கு விளைவிப்பதில்லை என கூறப்படுகிறது.
எப்படி தாய்ப்பாலில் யுரேனியம்? ஆய்வின்படி பீகாரின் பல பகுதிகளில் நிலத்தடி நீரில் யுரேனியம் அளவு அதிகரித்துள்ளது. குடிநீர், உணவு, பாசன நீர் வழியாக அது மனித உடலில் சென்று சேர வாய்ப்புள்ளது. விவசாயத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களும், தொழிற்சாலை கழிவுகளும் மேலும் மாசுபாட்டை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் சந்தேகிக்கிறார்கள்.
குழந்தைகளுக்குப் பாதிப்பு இருக்கிறதா? ஆய்வு குழுவின் தகவல்படி, யுரேனியம் உடலில் சேரும்போது பெரும்பாலும் எலும்புகள் மற்றும் சிறுநீரகத்தில் தேங்குகிறது. தாய்ப்பாலில் அதிகம் கலக்க வாய்ப்பு குறைவு. குழந்தைகளின் உடலில் புகும் அளவும் மிகக் குறைவு, மேலும் சிறுநீருடன் வெளியேறிவிடும் என கூறப்படுகிறது. எனினும் நீண்ட காலத்தில் குறைந்த IQ, நரம்பியல் வளர்ச்சி சீர்கேடு போன்ற பிரச்சினைகள் உருவாகலாம் என்பதால், மாசுபாட்டின் மூல காரணம் கண்டறியப்பட வேண்டும்.
மகாவீர் புற்றுநோய் சன்ஸ்தான் & ஆராய்ச்சி மையம், ICMR மற்றும் NIPER ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன. பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது உடனடி சுகாதார ஆபத்தாக கருதப்படவில்லை என்றாலும், 100% மாதிரிகளிலும் மாசு இருப்பது சுற்றுச்சூழல் மற்றும் குடிநீர் தரத்தைப் பற்றி பெரிய எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.



