சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தின் புதிய பிரிவுக்குச் சென்னை துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வருவதற்காக பிரத்யேக ரயில்வே தண்டவாளம் மற்றும் சரக்கு ரயில்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இந்த நிலையில், நேற்று எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில், சரக்கு ரயில் மோதி தளவாடங்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று சேதமடைந்தது.
நேற்று மேட்டூர் புதிய அனல் மின்நிலையத்திற்குத் தளவாடப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வாகனம் வந்தது. அந்தச் சமயத்தில் ரயில் எதுவும் வராது என்று தவறுதலாக கருதிய அதன் ஓட்டுநர், பொருட்களை இறக்குவதற்கு வசதியாக வாகனத்தை நேரடியாக ரயில் தண்டவாளப் பகுதியில் நிறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, சென்னையில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு இரயில் ஒன்று அங்கு வேகமாக வந்தது. ரயிலை இயக்கியவர் (லோகோ பைலட்), தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு வாகனத்தை சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத இரயில் எஞ்சின், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கிச் சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநர் அந்தச் சமயத்தில் வாகனத்திற்குள் இல்லாததால் அவர் உயிர் தப்பினார். தண்டவாளத்தின் நடுவே சரக்கு வாகனம் நின்றதால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து அனல் மின்நிலைய நிர்வாகமும் ரயில்வே அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : ஆச்சரியம் ஆனால் உண்மை..!! உலகில் நதியே இல்லாத நாடுகள் எது தெரியுமா..? எப்படி உயிர் வாழ்கிறார்கள்..?



