கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு முதல் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு கொண்டாடி வருகின்றனர்.
இயேசு கிறிஸ்துவின் பிறந்ததை கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் டிசம்பர் தொடக்கம் முதலே கிறிஸ்துமஸ் விழா களைகட்டிவிடும். இந்நிலையில் தான் 2023ம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் போப் பிரான்ஸிஸ் தலைமையில் இன்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடந்தது. புனித பீட்டர் பேராலயத்தில் குழந்தை இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையடுத்து போப் பிரான்சிஸ் சிறப்பு திருப்பலி வழங்கினார். உலகம் அமைதியாக இருக்க வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியுள்ளது. சென்னை சாந்தோம் தேவாலயம், நாகை வேளாங்கண்ணி சர்ச் உள்பட தமிழகத்தின் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் உள்ளனர். இங்குள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதுதவிர கோவை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சர்ச்களிலும் நள்ளிரவு முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சர்ச்சகள் மற்றும் கிறிஸ்தவர்களி்ன வீடுகள் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஸ்டார்கள் ஒளிர செய்யப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சர்ச், வீடுகளில் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் நள்ளிரவு ஜெபத்துக்கு முன்னதாக பல சர்ச்சுகளில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.