திருப்பதி என்றாலே பெரும்பாலானோரின் நினைவிற்கு வருவது ஏழுமலையான் திருக்கோயில்தான். ஆனால், அந்த புனித நகரத்தின் அடிவாரத்தில், சிவபெருமானை வழிபடும் பண்டைய கபிலேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. திருப்பதியில் உள்ள ஒரே சிவன் கோவில் என்ற பெருமையையும் இந்தத் தலம் பெற்றுள்ளது.
புராண கதைகளின்படி, சாகர் மன்னன் உலக ஆதிக்கம் பெற அஸ்வமேத யாகம் நடத்தினார். அந்த யாகத்தைத் தடுக்கும் நோக்கில் இந்திரன், யாகத்திற்காக விடப்பட்ட பலிக்குதிரையை திருடி, தியானத்தில் இருந்த முனிவர் கபிலரின் அருகே கட்டிவிட்டு மறைந்தார்.
குதிரையைத் தேடி வந்த சாகர மன்னனின் அறுபதாயிரம் மகன்கள், குதிரை முனிவரின் அருகே இருப்பதைக் கண்டு, அவரையே குற்றவாளி என எண்ணி அவமதித்தனர். இதனால் தியானம் குலைந்த கபில முனிவர் கண்களைத் திறந்தவுடன், அவரது தபசக்தி தீயாய் வெளிப்பட்டு, மன்னனின் அனைத்து மகன்களும் எரிந்து சாம்பலானதாக புராணங்கள் கூறுகின்றன.
தனது கோபத்தால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க, கபில முனிவர் கடும் தவம் செய்து சிவபெருமானை தரிசனம் செய்ததாக நம்பப்படுகிறது. அப்போது சிவபெருமான் அவருக்கு அருள்பாலித்த இடமே, இன்று கபிலேஸ்வரர் கோவில் என்ற பெயரில் போற்றப்படுகின்றது.
கபிலேஸ்வரர் கோவில் அருகில் அமைந்துள்ள கபில தீர்த்தம் என்ற புனித நீர்நிலையும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து விழும் அருவிநீர், நேரடியாக தீர்த்தக் குளத்தில் கலப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. இந்தத் தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டால் பாவ நிவாரணமும் மன அமைதியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஏழுமலையான் திருக்கோவிலுக்கு செல்லும் முன் அல்லது பின்னர், இந்த பண்டைய சிவாலயத்தில் தரிசனம் செய்வது புண்ணியமானதாக கருதப்படுகிறது.
கோவிலில் கபிலேஸ்வரர் (சிவன்) சன்னதியுடன், காமாட்சி அம்மன், விநாயகர், முருகன், கிருஷ்ணர் ஆகிய தெய்வ சன்னதிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி, பிரம்மோத்ஸவம், விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய திருவிழாக்கள் மிக விமரிசையாகவும், பக்தர்கள் திரளாக கலந்துகொள்ளும் வகையிலும் கொண்டாடப்படுகின்றன.
Read more: வயிறு பசித்தால் உணவை ஆர்டர் செய்யும் AI மூலம் இயங்கும் சாதனத்தை உருவாக்கிய மங்களூரு நபர்!



