வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.. இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர். 21க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர வானிலை காரணமாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மக்களைத் தவிர்த்து, இலங்கை அரசு வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இந்த புயல் இந்தியாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரளாவில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. நவம்பர் 30 ஆம் தேதி வட தமிழக கடலோரப் பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி இரங்கல்
டிட்வா புயலால் ஏற்பட்ட உயிர் இழப்பு குறித்து பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ டிட்வா சூறாவளியால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான குணமடைதலுக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்..
நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா ஆபரேஷன் சாகர் பந்துவைத் தொடங்கியுள்ளது என்று மோடி அறிவித்துள்ளார்.. மேலும் “எங்கள் நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இந்தியாவுடன் ஒற்றுமையுடன், ஆபரேஷன் சாகர் திட்டத்தின் கீழ் நிவாரணப் பொருட்களை இந்தியா அவசரமாக அனுப்பியுள்ளது. நிலைமை மாறும்போது கூடுதல் உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஆலோசனை :
இதனிடையே டிட்வா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கி உள்ளார்.. மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ 16 மாநில பேரிடர் மீட்புப் படைகளும் 12 தேசிய பேரிடர் மீட்புப் படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்! பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” குறிப்பிட்டுள்ளார்..
Read More : டிச., 4, 5 தேதிகளில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..



