பழக்கடைக்காரருக்கு அவரது வாடிக்கையாளர்களில் ஒருவர் ரூ. 3.80 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக கொடுத்துள்ளார். இந்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவம் சீனாவின் ஷாங்காய் நகரில் தான் நடந்துள்ளது. அந்த வாடிக்கையாளருக்கு 3 சகோதரிகள் இருக்கின்றனர். இருப்பினும் அவர் யாருக்கும் சொத்தை எழுதி வைக்காமல் பழக்கடைக் காரருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். மா என்ற முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகே லியூ என்ற பழ வியாபாரியை சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளது. முதியவரின் மகன் இறந்துவிட பின்னர் அவரை, லியூதான் நல்லபடியாக பார்த்துக் கொண்டுள்ளார்.
முதியவருக்கு சொந்தக் காரர்கள் இருந்தபோதிலும் அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. முதியவர் மா உயிரிழக்கும் வரையிலும் லியூ அவரை பத்திரமாக பார்த்துக் கொண்டார். இந்நிலையில், முதியவர் உயிரிழந்து விட, அவர் எழுதி விட்டு சென்ற உயிலைப் பார்த்த உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதாவது தனக்கு சொந்தமான ரூ. 3.80 கோடி மதிப்புள்ள வீட்டை, தன்னை கவனித்துக் கொண்ட லியூ பேருக்கு முதியவர் எழுதி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அனைவரும் பழக்கடைக்காரருக்கு எதிராக ஷாங்காய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மன நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை ஏமாற்றி பழக்கடைக்காரர் சொத்தை அபகரித்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இருப்பினும், 2020-ஆம் ஆண்டே, முதியவர் மா தனது வீட்டை எழுதி தந்து விட்டதாக பழக்கடைக்காரர் தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பழக்கடைக்காரர் பக்கம் நியாயம் இருப்பதாக கூறி, முதியவரின் உறவினர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.