கார்த்திகை தீபத்தன்று விரதம் இருப்பது எப்படி..? எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்..? சரியான நேரம் எது..?

Thiruvannamalai Deepam 2025

வருடம் முழுவதும் மற்ற விரதங்களை மேற்கொள்ள முடியாதவர்கள் கூட, கார்த்திகை மாதத்தில் வரும் மகா தீபத் திருநாளில் ஒரு நாள் முழுவதும் விரதத்தைப் பின்பற்றினால், சிவபெருமானின் அருள் முழுமையாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அருணாசலேஸ்வரரின் ஜோதித் திருநாளாகக் கருதப்படும் கார்த்திகை தீபம், ஆண்டிற்கு ஒருமுறை ஈசன் அர்த்தநாரீஸ்வரராக வெளிப்படும் உன்னத தருணமுமாகும். இந்த நாளில் தீபம் ஏற்றுவது ஒளி, ஆன்மீகம் மற்றும் தூய்மையை ஒருசேரப் பெற்றுத் தரும் என்றும், இறைவனை மனமாரப் பிரார்த்தித்தால் தெளிவான மனநிலை, குடும்ப நலன், ஆரோக்கியம், வளம் மற்றும் சுபீட்சம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.


இந்த கார்த்திகை மகா தீப திருநாளை எவ்வாறு கொண்டாட வேண்டும், விரதம் தொடங்குவது மற்றும் தீபம் ஏற்ற வேண்டிய நேரம், விளக்குகளின் எண்ணிக்கை மற்றும் அதன் பலன்கள் குறித்து ஆன்மீகச் சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தனது யூடியூப் சேனல் மூலம் விரிவாக விளக்கியுள்ளார்.

தீபம் ஏற்ற வேண்டிய சரியான நேரம் :

மகா தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டிய நேரம் மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு கிருத்திகை நட்சத்திரம் டிசம்பர் 3ஆம் தேதி மாலை 4.48 மணிக்குத் தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3.08 வரை நீடிக்கிறது. பௌர்ணமி திதி டிசம்பர் 4ஆம் தேதி காலை 7.55 மணிக்கு துவங்குகிறது. எனவே, இந்த ஆண்டிற்கான மிகவும் பொருத்தமான தீபம் ஏற்றும் நேரம், டிசம்பர் 3ஆம் தேதி மாலை 6 மணி ஆகும்.

எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்..?

கார்த்திகை தினத்தில், குறைந்தபட்சம் 27 தீபங்கள் (27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில்) ஏற்றுவது மிகவும் சிறப்பு. மண்விளக்குகளை வாங்கி, வீடு முழுவதும் சமையலறை, படுக்கையறை, மொட்டை மாடி, மாடிப்படி, வீட்டு வாசல் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றுவது சிறப்பு. பண்டிகை நாட்களில், மண்விளக்கு விற்பவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு அதிக அளவில் விளக்குகளை வாங்குவது ஒரு சமூகப் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தீபம் ஏற்றுவதற்கு, முதல் இரண்டு அல்லது 3 விளக்குகளுக்கு மட்டும் நெய் பயன்படுத்தலாம்; மற்ற அனைத்து விளக்குகளுக்கும் நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. மேலும், விளக்குகளின் அடியில் வாழையிலை, பூவரச இலை அல்லது தட்டு போன்றவற்றை வைப்பது சுத்தத்தையும் ஆன்மீகத்தையும் அதிகரிக்கும்.

ஆறுகோண தீபம் மற்றும் விரத நிறைவு :

மாலை 6 மணிக்குத் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் காட்சியைக் கண்டு, “அரோகரா” என்று சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டு வாசலில் முதல் தீபத்தை ஏற்றி, பின்னர் பூஜையறை மற்றும் வீடு முழுவதும் தீபம் ஏற்றலாம். முருகப்பெருமானுக்கு உகந்த ஆறுகோண தீபம் ஏற்றுவது கூடுதல் சிறப்பாகும். நெய்வேத்யமாகக் கார்த்திகைப் பொறி, வாழைப்பழம் மற்றும் வெற்றிலை-பாக்கு போன்றவற்றைச் சமர்ப்பிக்கலாம். விரதம் முடிந்த பிறகு சிவபுராணம், கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் அல்லது தெரிந்த பிற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம்.

பெண்கள் மாதவிடாய் காரணமாக தீபம் ஏற்ற முடியாத சூழலில் இருந்தால், வீட்டில் உள்ள யாராவது ஒருவர் ஏற்றலாம். விரதத்தில் இருக்க முடியாதவர்கள் மனசாட்சி அடிப்படையில் உணவருந்தலாம். மேலும், அன்னதானம் செய்ய முடியாதவர்கள், மாலையில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது உணவு அளித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

சொக்கப்பனை ஏற்றும் முக்கிய காரணம் :

சொக்கப்பனை எரிப்பதன் பின்னணியில் ஒரு உன்னத நோக்கம் உள்ளது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், மிருக ஜீவராசிகளுக்கும் (நாய், பூனை, மாடு, ஆடு) மோட்சப் பாதை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இறைவன் காட்டும் ஒளிப் பாதை என்பதைக் குறிக்கவே சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. இவ்வளவு புனிதமான நாளில், பக்தர்கள் இறைவனைப் பக்தியுடன் வணங்கி, அனைத்து நலன்களையும் அருணாசலேஸ்வரர் மற்றும் முருகப்பெருமான் மூலம் பெறலாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read More : திருவண்ணாமலை தீபத்தை நேரில் தரிசிக்க வேண்டுமா..? ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி..?

CHELLA

Next Post

பூமியில் மொத்தம் எவ்வளவு தங்கம் இருக்கிறது? அதன் மதிப்பு என்ன? தெரிஞ்சுக்க இதை படிங்க!

Mon Dec 1 , 2025
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனித வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த உலோகமாக தங்கம் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. மன்னர்களின் நகைகள் முதல் சாதாரண மக்களின் திருமணப் பொருட்கள் வரை, நாடுகளின் பெட்டகங்கள் முதல் உலகப் பொருளாதாரத்தின் இருப்புக்கள் வரை.. தங்கம் எனப்படும் உலோகம் அனைத்தையும் பாதிக்கிறது. ஆனால் பூமியில் மொத்தம் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ‘விஷுவல் கேபிடலிஸ்ட்’ என்ற சர்வதேச […]
gold

You May Like