சென்னை, திருவள்ளூரில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..
சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (01-12-2025) காலை 0830 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் -புதுவை – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
அப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 40 கிலோ மீட்டராக இருந்தது. இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அப்பொழுது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோமீட்டராகவும் இருக்கக்கூடும்.
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட தமிழகம் – புதுவை கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை, காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : 1,000க்கும் மேற்பட்டோர் பலி.. தென்கிழக்கு ஆசியாவில் சென்யார் & டிட்வா புயல் ஏற்படுத்திய பேரழிவுகள் என்னென்ன?



