தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம், தினசரி பால் பாக்கெட்டுகள் மட்டுமின்றி நெய், பன்னீர், தயிர் போன்ற பால் பொருட்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், பண்டிகை காலத்திற்காக வழங்கப்பட்ட தள்ளுபடிகளை நிறுத்தியதன் மூலம், ஆவின் நெய் மற்றும் பன்னீர் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025 செப்டம்பர் மாதம் பண்டிகை காலத்தை ஒட்டி ஆவின் நிறுவனம் நெய் விலையைக் குறைத்துத் தள்ளுபடி விலையை அறிவித்திருந்தது. தற்போது பண்டிகைக் காலம் முடிவடைந்த நிலையில், அந்தத் தள்ளுபடியை ஆவின் நிறுவனம் நீக்கியுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக, நெய் மற்றும் பன்னீர் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. விலை உயர்வுக்குப் பிறகு, ஒரு கிலோ நெய்யின் விலை ரூ. 700 ஆக உயர்ந்துள்ளது.
1 லிட்டர் நெய் – ரூ. 40 உயர்வு
அரை லிட்டர் நெய் – ரூ. 20 உயர்வு
5 கிலோ நெய் – ரூ. 350 உயர்வு
15 கிலோ நெய் – ரூ. 1,155 உயர்வு
நெய்யை போலவே, ஆவின் பன்னீர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தின் இந்த விலை உயர்வால், அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இந்தக் கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது விளக்கத்தை அளித்துள்ளார். அவர், “உலகிலேயே மிக குறைந்த விலையில் பால் மற்றும் பால் பொருட்களை விற்கும் நிறுவனம் ஆவின் என்பது பாஜகவினருக்கு தெரியுமா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “ஆவின் நிறுவனம் ஈட்டும் லாபம் பெருமுதலாளிகளுக்குச் செல்லாது. மாறாக, அது வறுமையில் வாழும் ஏழை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் போனஸாகத் திரும்பச் செல்லும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், “பால் உற்பத்திச் செலவு, பாஜக அரசின் ஜிஎஸ்டி (GST) வரியால் உயர்ந்துள்ள நிலையில், விவசாயிகளின் வலியைப் பற்றி அறியாமல் பேசுவது பாஜகவினரின் கார்பரேட் மனநிலையைக் காட்டுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பால் உற்பத்தியாளர்களுக்கு முதன்முறையாக லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3 ஊக்கத்தொகை கொடுத்துப் பேருதவி புரிந்துள்ளார்” என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
Read More : 2026இல் தங்கம் விலை 50% உயருமா..? அதிர்ச்சி கணிப்பை வெளியிட்ட பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன்..!!



