திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பியார் சோலா பகுதியைச் சேர்ந்த குழந்தை இயேசு என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது மனைவி பிரிசிலாவின் தாய் மாமன் மகன் பிரேம் என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்கிடையே, பிரேம் வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் திருப்பூரில் வசித்து வந்துள்ளார்.
பிரேம் பங்களா வாங்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில், கொடைக்கானல் பகுதியில் ஒரு பங்களா விற்க வருவதை அறிந்த குழந்தை இயேசு, அந்தத் தகவலை பிரேமுக்குத் தெரிவிக்க அவரது செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டுள்ளார். ஆனால், பிரேம் போன் எடுக்கவில்லை. பின்னர், ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, பிரேமின் மனைவி போனை எடுத்து, அவர் வேலைக்குச் சென்றுள்ளதாகவும், பிறகு பிரேமின் பிள்ளைகள் உறவினர் என்ற முறையில் குழந்தை இயேசுவுடன் வீடியோ காலில் பேசியுள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும், பிரேம் மனம் முழுக்கத் தவறாகப் பதிய காரணமாகின. தன் மனைவி மற்றும் குழந்தை இயேசு இடையே தகாத உறவு இருப்பதாக சந்தேகித்த பிரேம், முதலில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பிறகு வழக்கம் போல மது அருந்த வேண்டும் என்று கூறி குழந்தை இயேசுவை அழைத்த பிரேம், இருவரும் தனியாக ஒன்றாக மது அருந்தியபோது, திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஆத்திரம் அடைந்த பிரேம், “என் பொண்டாட்டி கூட பேச நீ யாருடா?” என்று கேட்டு, ஆவேசத்துடன் கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்துக் குழந்தை இயேசுவைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை இயேசுவை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பிரேமைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



