தற்போது நிலவும் அதிகக் குளிர் காரணமாக முதியோருக்கு ‘முகவாதம்’ (Facial Paralysis) எனப்படும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிவகங்கை அரசுப் பொதுநல மருத்துவர் அ.ப.பரூக் அப்துல்லா எச்சரித்துள்ளார். முகவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் விரிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
முகவாதம் என்றால் என்ன?
முகத்திற்கு உணர்வை அளிக்கும் முக நரம்பில் ஏற்படும் அழுத்தம், அழற்சி அல்லது வைரஸ் தொற்று போன்றவற்றால் உருவாகும் பாதிப்புதான் முகவாதம் எனப்படுகிறது. அதிக குளிர் காலங்களில் இந்த நிலை மோசமடைய வாய்ப்பு உள்ளது.
தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் :
முகவாதம் ஏற்படாமல் தடுக்க முதியவர்கள் கீழ்க்கண்ட பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
குளிர்ந்த தரை: குளிர்ந்த தரையில், பாய் அல்லது தலையணை உள்ளிட்ட எந்த விரிப்பும் இல்லாமல் நேரடியாகப் படுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னத்தில் குளிர்ச்சி: ஒரு பக்க கன்னத்தை நேரடியாகக் குளிர்ந்த தரையில் வைத்துப் படுப்பதன் மூலமாக, முக நரம்பு அழுத்தப்பட்டு முகவாதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
பயணங்களில் கவனம்: கார், பேருந்து அல்லது ரயில் பயணங்களின்போது, அதிக நேரம் குளிர்ந்த காற்று நேரடியாகக் காது அல்லது கன்னத்தில் படுமாறு பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஏசி பயன்பாடு: ‘ஏசி’ பயன்பாட்டில் இருந்தாலும், குளிர்ந்த காற்று நேரடியாக முகத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டியவை :
* முகவாதம் பாதிப்பு ஏற்பட்டால், கண் பாதுகாப்பு மிகவும் அவசியம்.
* இந்தப் பாதிப்பில் கண்கள் திறந்தே இருக்கும் என்பதால், கண் வறண்டு போகாமல் இருக்கச் சொட்டு மருந்து (Eye Drops) பயன்படுத்தலாம்.
* பகலில் கண்ணாடி அணிவது மற்றும் இரவில் கண்களுக்கு மூடு கவசம் (Eye Mask) அணிவது நல்லது.
* உணவைப் பொறுத்தவரை, திட உணவுகள் அல்லது திரவ உணவுகளைத் தவிர்த்து, கரைத்த கஞ்சியாக உட்கொள்வது எளிதாக இருக்கும் என்றும் மருத்துவர் அ.ப.பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.



