மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய சசிகலா, அங்கு உறுதிமொழி ஏற்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.
அவர் பேசுகையில், “ஒருவர் மீது கோபம் இருக்கிறது என்பதற்காக பெரிய முடிவுகளை அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் வந்தவர்கள் இதுபோலச் செய்வதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.” எனத் தெரிவித்தார்.
அதிமுகவை அமித் ஷா தான் ஒருங்கிணைப்பாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அரசியல் கட்சியினர், என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படி தேர்தல் வியூகம் வகுக்கிறார்கள் என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் தெரியவரும்” எனத் தெரிவித்தார்.



