செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் வேகத்தை பார்த்தால், அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கே பயம் உண்டாகிறது. இந்நிலையில், உலகின் முன்னணி AI நிபுணர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவரது கணிப்புப்படி, இனி வரும் காலங்களில் உலகெங்கிலும் சுமார் 80% வேலைவாய்ப்புகள் AI காரணமாக இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாகவும், அதிக சம்பளம் பெறும், உயர் திறன் தேவைப்படும் வேலைகளும் இதில் அடங்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இன்றைய நவீன AI அமைப்புகள், மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்ய தயாராகி விட்டதாக தெரிவித்தார். உதாரணத்திற்கு, மருத்துவத் துறை நீண்ட காலமாகவே மிகவும் பாதுகாப்பான துறை என்று கருதப்பட்டது. ஆனால், நீங்கள் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக பயிற்சி பெற செலவிடும் வருடங்களுக்கு பதிலாக, AI ரோபோட்களுக்கு வெறும் 7 வினாடிகள் போதுமானது.
அது எந்த ஒரு மனிதரை விடவும் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக கற்றுக் கொள்ளும் என்று அதிர்ச்சி அளிக்கும் தகவலை அவர் வெளியிட்டார். இதன் பொருள், துல்லியமான முடிவு மற்றும் அதிக அறிவு தேவைப்படும் வேலைகளை ஏஐ மிக விரைவிலேயே கைப்பற்றிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.
CEO பதவிகளுக்கும் ஆபத்து :
பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் (CEO) இந்த ஆபத்து உள்ளது என்று ரஸ்ஸல் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு நிறுவனத்தின் இயக்குநர் குழுவே, “நீங்கள் முடிவெடுக்கும் அதிகாரத்தை AI-க்குக் கொடுக்கவில்லை என்றால், உங்களை வேலையை விட்டு நீக்க வேண்டியிருக்கும். ஏனெனில், AI-ஐ பயன்படுத்தும் மற்ற நிறுவனங்கள் உங்களை விடச் சிறப்பாகச் செயல்படுகின்றன” என்று கேட்கும் நிலை வரும் என்று அவர் எச்சரித்தார். கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சையும் இதே கருத்தைத்தான் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ரஸ்ஸலின் இந்த கருத்து எதிர்காலத்தில் 80% பேர் வேலையில்லாமல் இருக்க நேரிடலாம் என்பதால், அரசுகள் இந்த பொருளாதார மாற்றத்திற்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும் என்று வலியுறுத்துகிறது. AI இப்போது குறியீடு எழுதுகிறது, நோய்களைக் கண்டறிகிறது, சட்ட ஆவணங்களைத் தயாரிக்கிறது. இவை அனைத்தையும் மனிதர்களைவிட வேகமாகவும், குறைந்த செலவிலும் செய்கிறது. எனவே, வேலைவாய்ப்பின் எதிர்காலம் இன்று உலகையே உலுக்கும் அவசர கேள்வியாக மாறிவிட்டது.



