தெலுங்கு திரையுலகில் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் ‘மிர்ச்சி’ மாதவி, சினிமா துறையில் தான் சந்தித்த மோசமான ‘காஸ்டிங் கவுச்’ அனுபவங்கள் குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார்.
பிரபாஸின் ‘மிர்ச்சி’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை மாதவி, ஒருமுறை தனக்கு வந்த அதிர்ச்சியூட்டும் அழைப்பு பற்றிப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “ஒரு நபர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘பிரகாஷ் ராஜுக்கு மனைவியாக நடிக்கும் முக்கியமான கதாபாத்திரம் உள்ளது. ஆனால், அதற்காக நீங்கள் 5 பேருடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்’ என்றார்.
எனக்கு அதன் பொருள் முதலில் புரியவில்லை என்றேன். அதற்கு அவர், உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும் என்று சொன்னார்” என்று மாதவி கூறினார். உடனே சுதாரித்துக் கொண்ட நடிகை, “நான் அப்படிப்பட்டவள் அல்ல. இயக்குநர் சுகுமார் சார் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். உங்கள் வாய்ப்பு எனக்குத் தேவையில்லை” என்று கோபத்துடன் கூறியுள்ளார். ஆனாலும், அது ஒரு நல்ல வாய்ப்பு என்று அந்த நபர் வலியுறுத்தவே, உடனடியாக மாதவி அந்த அழைப்பைத் துண்டித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஆரம்பக் காலத்தில் மற்றொரு இயக்குநர் தன்னை வீட்டுக்கு வந்து சந்திக்கலாமா என்று கேட்டதாகவும், அப்போது பட வாய்ப்புகள் எப்படி பெறுவது என்று தெரியாததால் அவரை தான் வீட்டிற்கே அழைத்ததாகவும் மாதவி கூறினார். அவர் என்னை நடக்கச் சொன்னார். பிறகு புடவை கட்டி வரச் சொல்லி, எனது இடுப்பைக் காட்டச் சொன்னார் என்று அதிர்ச்சியூட்டும் தகவலை மாதவி வெளியிட்டார்.
இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற நடிகை மாதவி, மரியாதையாக இங்கிருந்து செல்லுங்கள், இல்லையென்றால் செருப்பால் அடிப்பேன் என்று கடுமையாக எச்சரித்து அவரைத் துரத்தி அடித்துள்ளார். சினிமா மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.



