இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ, கடந்த சில நாட்களாக சந்தித்துவரும் செயல்பாட்டு தடங்கல்கள் காரணமாக, பெருமளவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் விமான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிசம்பர் 7க்குள் பணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் இண்டிகோவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “ அதிகளவில் ரத்தான மற்றும் தாமதமான விமானங்களால் பல பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். பயணிகள் எந்த நிதிச் சுமையையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக, உடனடி பணத்தீர்ப்பு வழங்குவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை சீராகும் வரை, விமான நிறுவனத்தின் நடவடிக்கைகள் அமைச்சகத்தால் நெருக்கமாக கண்காணிக்கப்படும். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் “ரத்து செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட அனைத்து விமானங்களுக்கான பணத் திருப்பிச் செலுத்தல் (ரிபண்ட்) செயல்முறை 2025 டிசம்பர் 7, ஞாயிறு, இரவு 8:00 மணிக்குள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும்.. ரத்தான விமானங்களால் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மீண்டும் அட்டவணை மாற்றம் (rescheduling) செய்ய எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.. ரிபண்ட் செயல்முறையில் தாமதம் அல்லது விதிகளை பின்பற்றாத நிலை ஏற்பட்டால், உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது..
இண்டிகோ பயணிகளுக்கு ஏற்பட்ட சோதனை சனிக்கிழமையும் தொடர்ந்தது, 500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டது.
முன்னதாக மத்திய அரசு விமான கட்டண உயர்வு குறித்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.. நாடாளுமன்ற விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Civil Aviation – MoCA) வெளியிட்ட அறிக்கையில்” இண்டிகோ நெருக்கடியால் ஏற்பட்டுள்ள தடங்கலின் காரணமாக, சில விமான நிறுவனங்கள் கட்டணங்களை அசாதாரணமாக அதிகரித்துள்ளன என்பதை அமைச்சகம் கவனித்துள்ளது.
இதனால் பயணிகள் சிரமப்படலாம் என்பதால், அனைத்து பாதிக்கப்பட்ட வழித்தடங்களிலும் நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க கட்டணங்கள் மட்டும் விதிக்கப்பட வேண்டும்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.. அதற்காக, அரசு தனது ஒழுங்குமுறை அதிகாரத்தைப் பயன்படுத்தி, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் கட்டண உச்சவரம்பை (fare caps) கடைப்பிடிக்கும்படி உத்தரவு வெளியிட்டுள்ளது.



