உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில், அத்தைக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட காதல், இறுதியில் திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த விநோதச் சம்பவம் இரு குடும்பங்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காவல் துறையின் சமரச முயற்சியால் இறுதியில் திருமணம் அரங்கேறியது.
ஜகன்னாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் (24) என்ற இளைஞர் கூலி வேலை செய்து வருகிறார். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு, இவர் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள தனது தாய்வழிப் பாட்டியின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு, தனது தாய்வழி அத்தையான சஞ்சனா தேவியை (23) சந்தித்தார்.
முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்ட நிலையில், இந்த அறிமுகம் நாளடைவில் ஆழமான காதலாக மாறியது. அத்தை – மருமகன் என்ற நெருங்கிய உறவுமுறையை மறந்து, இருவரும் அலைபேசி மூலமாகவும், ரகசியமாகவும் சந்தித்துப் பேசி வந்தனர். இந்த நிலையில், கிருஷ்ண குமார் மற்றும் சஞ்சனா தேவி ஆகிய இருவரின் காதல் குறித்து இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததும், அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
தங்கள் உறவுமுறையில் இப்படி ஒரு திருமணம் நடப்பது முறையல்ல என்று இரு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண பல முறை ஊர்ப் பஞ்சாயத்துகள் கூட்டப்பட்டும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. குடும்ப உறுப்பினர்களிடையே மனக்கசப்பும் பிரச்சனைகளும் தொடர்ந்தன.
காதலர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்த நிலையில், இந்த விவகாரம் இறுதியாக மொஹபத்பூர் பைன்சா காவல் நிலையத்திற்கு வந்தது. காவல் நிலைய போலீசார், உடனடியாக தலையிட்டு இரு குடும்பத்தினரையும் சமாதானப் பேச்சுவார்த்தைக்காக அழைத்தனர்.
விசாரணையின்போது, குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்த்த போதிலும், அந்த இளைஞனும், அத்தையான பெண்ணும் தாங்கள் பிரியப் போவதில்லை என்றும், திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி, அருகிலுள்ள கோவிலில் கிருஷ்ண குமாருக்கும் சஞ்சனா தேவிக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தற்போது சஞ்சனா, தனது கணவரான கிருஷ்ணாவின் வீட்டில் வசித்து வருகிறார். அத்தை – மருமகன் உறவை மீறி, காவல் துறையின் சமரசத்துடன் நடைபெற்ற இந்த விநோதத் திருமணம் கௌசாம்பி பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.



