கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் மஞ்சுநாத் (45). இவருக்கு மனைவியுடன் 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் தாயார் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான மஞ்சுநாத், அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சமீப நாட்களாக மஞ்சுநாத் தனது மகள்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்துள்ளார். பின்னர், மீண்டும் பள்ளிக்கு வந்த சிறுமிகளிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது, அவர்கள் அழுதுகொண்டே, தங்களை தந்தை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொல்லிவிடுவோம் என்ற பயத்தில் வீட்டில் பூட்டி வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள், மஞ்சுநாத்தின் தாயாரிடம் (சிறுமிகளின்) விசாரித்தனர். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “மகள்களை மட்டுமல்ல, என்னையும் ஒருமுறை மஞ்சுநாத் தவறான முறையில் அணுக முயன்றான். நான் கத்தியதால் தான் தப்பித்தேன்” என்று அவர் கண்ணீருடன் கூறியிருக்கிறார்.
இந்த தகவல்கள் கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. ஆத்திரமடைந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, சித்ரதுர்கா மாவட்டப் போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மஞ்சுநாத் போன்ற கொடூர குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் வலியுறுத்தினர்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, உடனடியாக இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் மஞ்சுநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


