இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்கள் தொகை அதிகம். இந்திய மின்வணிக நிறுவனமான மீஷோ அவர்களை குறிவைத்து மிகக் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற மாபெரும் மின்வணிக நிறுவனங்களால் செய்ய முடியாததை மீஷோ எவ்வாறு செய்ய முடிகிறது… இவ்வளவு குறைந்த விலையில் எப்படி வழங்குகிறது? தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்கிறதா…? என பலர் யோசித்திருப்போம். மீஷோவின் வணிக ரகசியம் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
மீஷோவில் இவ்வளவு குறைந்த விலையில் பொருட்கள் எவ்வாறு கிடைக்கின்றன என்பதை LinkedIn பயனர் பிரஜ்வால் ஒரு உதாரணத்துடன் விளக்கினார். அவர் கூறுகையில், மீஷோவில் ஒரு டி-சர்ட்டின் விலை ரூ.269 என்று வைத்துக்கொள்வோம். இதில், அதன் உற்பத்திக்கு சுமார் ரூ.150, சந்தைப்படுத்தலுக்கு ரூ.50, மற்றும் தளவாடங்களுக்கு ரூ.50-80 செலவிடப்படுகிறது. இதை விற்பதன் மூலம் மீஷோவுக்கு என்ன லாபம்? அதாவது, அதன் வணிக ரகசியம் மறைக்கப்பட்ட இடம் இதுதான்.
இந்தியாவில் மூன்று வகையான நுகர்வோர் உள்ளனர். விலை எவ்வளவு இருந்தாலும், தயாரிப்பு விரைவாக தங்களைச் சென்றடைய வேண்டும் என்று விரும்புபவர்கள். இவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே. மீதமுள்ள 90 சதவீதம் பேர் குறைந்த விலையில் நல்ல தரமான பொருளை விரும்பினால் இன்னும் சிறிது காலம் காத்திருக்கத் தயாராக உள்ளனர். இதைத்தான் மீஷோ குறிவைக்கிறது. மேலும் போக்குவரத்து செலவுகளைக் குறைப்பதன் மூலம் லாபம் ஈட்டி வருகிறது.
மற்ற மின் வணிக நிறுவனங்களைப் போல விலையுயர்ந்த விமானப் போக்குவரத்தையோ, கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து உருவாக்கப்பட்ட பெரிய கிடங்குகளையோ மீஷோ பயன்படுத்துவதில்லை. அதுபோலவே, போக்குவரத்துக்காக தனிப்பட்ட லாரிகள் அல்லது பைக்குகளையும் வைத்திருப்பதில்லை. இதற்குப் பதிலாக, மீஷோ ஒரு நவீன சிறப்பு மென்பொருள் அடிப்படையிலான வணிக மாதிரியை உருவாக்கியுள்ளது.
இந்த மென்பொருள், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகளைத் துல்லியமாக அடையாளம் காண்கிறது. குறிப்பாக, பொருட்களை இறக்கிவிட்டு திரும்பும் பயணத்தில் காலியாகச் செல்லும் லாரிகளை மீஷோ பயன்படுத்துகிறது. இதன் மூலம், வழக்கமாக அதிகமாகும் போக்குவரத்து செலவை மிகக் குறைந்த அளவிற்கு குறைக்க முடிகிறது.
உதாரணமாக, ஒரு டி-ஷர்ட்டின் போக்குவரத்து செலவு வழக்கமாக ரூ.50 முதல் ரூ.80 வரை இருக்கும் நிலையில், மீஷோ தனது இந்த முறையின் மூலம் அதை ரூ.20 முதல் ரூ.30 ஆகக் குறைக்கிறது. இதன் விளைவாக, மீஷோவின் சராசரி டெலிவரி கட்டணம் ரூ.37 ஆக மட்டுமே இருக்கிறது.
இந்த குறைந்த போக்குவரத்து செலவுதான், மீஷோவுக்கு தயாரிப்புகளை நுகர்வோரிடம் மிகக் குறைந்த விலையில் வழங்குவதற்கான முக்கிய காரணமாகும். செலவுகளை கட்டுப்படுத்தும் இந்த புத்திசாலித்தனமான அணுகுமுறையால், வாடிக்கையாளர்களுக்கும் பயன் நிறுவனத்திற்கும் லாபம் என்ற இரட்டை வெற்றியை மீஷோ அடைந்துள்ளது.
Read more: திருச்சி NIT-யில் வேலை.. ரூ.40,000 சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? – முழு விவரம் உள்ளே..



