கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த உரிமைத்தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, உரிமைத்தொகை திட்டத்தில் அக்டோபர் மாதத்தில் மட்டும் கூடுதலாக 5,041 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. மேல்முறையீடு செய்ததில் தகுதியான பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்ட 5,041 பேர் புதிதாக திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், உரிமைத்தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமலாக்கத்துக்காக 8 தாசில்தாரர்கள் மற்றும் 101 துணை தாசில்தாரர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒரு கோடி மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்காக மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.