தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, திமுக, அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் புதிய வியூகங்களுடன் தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. 2021 தேர்தலில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அ.தி.மு.கவும், ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளை வலுவாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளையும் தங்கள் கட்சிக்குள் கொண்டு வரும் வேலையைத் தொடர்ந்து கவனித்து வருகிறது. இதன் மூலம், மாற்றுக்கட்சிகளின் செல்வாக்கை குறைத்து, தங்கள் பலத்தை அதிகரிப்பதே திமுகவின் முக்கிய நோக்கமாக உள்ளது.
மறுபுறம், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, வரவிருக்கும் தேர்தலில் எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு புதிய வியூகத்தை வகுத்து, தனது கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு முக்கியமான அசைன்மென்ட் கொடுத்துள்ளார்.
அந்த அசைன்மென்ட்டின் முக்கிய நோக்கம் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியில் உள்ளவர்களை மீண்டும் தாய்க் கழகத்தில் இணைப்பதுதான். இதன் மூலம் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை ஒருங்கிணைத்து, கட்சிக்குப் புத்துயிர் ஊட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
இதன் விளைவாக, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமமுகவின் முக்கிய நிர்வாகியான வலங்கைமான் ஆறுமுகம், தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார். இந்த இணைப்பு, டெல்டா பகுதிகளில் அ.ம.மு.க-வின் செல்வாக்கை குறைக்கும் என்றும், வரவிருக்கும் தேர்தலில் அ.தி.மு.க-வின் களப்பணிகளுக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் என்றும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.



