திருப்பூர் மாவட்டம் உத்தமபாளையம் வட்டம், மலை அணைப் பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால்நடைகளை மேய்க்க சென்ற ஒருவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு நடத்திய தீவிர விசாரணையில், இந்த கொலையைச் செய்தது விருப்ப ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், கருகிய நிலையில் கிடந்தவர் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த வடிவுக்கரசி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, சந்தேகத்துக்கு இடமான ஒரு நபரை போலீஸார் அடையாளம் கண்டனர்.
அவர் கலையம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 60 வயதான சங்கர் என்பவராவார். இவர் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு காவலராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர் ஆவார். சங்கருக்கு 4 மனைவிகள் இருந்ததாகவும், பல ஊர்களில் திருமணத்தை மீறிய உறவில் பெண் தோழிகள் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களில் சடலமாக கிடந்த வடிவுக்கரசும் ஒருவர்.
விசாரணையில், சங்கர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததும் தெரிய வந்தது. இந்தச் சதித் திட்டத்தில், வடிவுக்கரசி தனது உறவினர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி சங்கரிடம் கொடுத்திருந்தார். நாட்கள் செல்லச் செல்ல வேலை கிடைக்காததால், “அரசு வேலை வாங்கிக் கொடுங்கள், இல்லையென்றால் உறவினர்களிடம் வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுங்கள்” என்று வடிவுக்கரசி, சங்கரைக் கடுமையாக வற்புறுத்தி வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கர், வடிவுக்கரசியை எப்படியாவது நிரந்தரமாகத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். பணத்தைத் தருவதாகக் கூறி வடிவுக்கரசியை மலை அணைப் பகுதிக்கு அழைத்துச் சென்ற சங்கர், வட்டமலை கரை அணை ஓடையின் மேல் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, அவரைப் பேச்சுவார்த்தைக்காகக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மதிய நேரத்தில் இருவரும் மது அருந்திய நிலையில், வாக்குவாதம் முற்றியது.
ஆத்திரத்தில் சங்கர் அருகில் கிடந்த பெரிய கல்லால் வடிவுக்கரசின் தலை, கை மற்றும் கால்களில் கண்மூடித்தனமாகத் தாக்கிக் கொடூரமாகக் கொலை செய்தார். பிறகு, அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு, சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். தீவிர விசாரணைக்குப் பிறகு, இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்த முன்னாள் காவலர் சங்கர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



