சென்னையில் 12ஆம் வகுப்பு படித்து வரும் எஸ்தர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியின் தாயார், தனது தோழி கற்பகத்திற்கு உதவுவதற்காக மகள் எஸ்தரை நகை எடுத்துச் செல்லும்படி அனுப்பியுள்ளார். கிழக்கு தாம்பரம் அருகே கற்பகத்தின் மகள் சந்தியாவை சந்தித்த எஸ்தர், இருவரும் சேர்ந்து நகையை அடமானம் வைத்து ரூ.30,000 பெற்றுள்ளனர்.
அதன் பிறகு, சந்தியா, எஸ்தரை இரும்புளியூரில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த சந்தியாவின் தந்தை சங்கர், சந்தியா குளிக்கச் சென்ற சமயத்தில் எஸ்தரை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. எஸ்தர் கூச்சலிட்டு உதவி கேட்டபோது அங்கு வந்த சந்தியா, முதலில் தனது தந்தையைத் திட்டுவது போல நடித்து, பின்னர் தானும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியுள்ளார்.
சங்கர் மற்றும் சந்தியா இருவரும் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால், அவதூறான புகைப்படங்களை இணையத்தில் பரப்புவதாக மிரட்டியுள்ளனர். இந்தக் கொடுமையால் மனமுடைந்த எஸ்தர், வீடு திரும்பியதும் அதிகப்படியான மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டுத் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், எஸ்தர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தந்தை சங்கர் மற்றும் மகள் சந்தியா இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உள்ளூர் மக்களிடையே சங்கர் மற்றும் சந்தியா இடையே தகாத உறவு இருந்திருக்கலாம் என்ற வதந்திகள் பரவி வருவதால், இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



