இன்றைய காலகட்டத்தில், பெண்கள் குடும்பப் பொறுப்புகளுடன் தங்கள் பொருளாதார நிலையையும் மேம்படுத்தி, சுயச்சார்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புற மற்றும் நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு, வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வருமானம் ஈட்டும் சுயதொழில் வாய்ப்புகள் மிகவும் அவசியமாகிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், குறைந்த முதலீட்டில் நிலையான வருமானம் ஈட்ட உதவும் தையற்கலை போன்ற திறன் பயிற்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஊக்குவிக்கும் நோக்கில், கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் (RSETI), பெண்களுக்கு இலவசத் தையற்கலை பயிற்சியை அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் (RSETI) சார்பில், பெண்களுக்கு ஒரு சிறப்பான இலவசத் தையற்கலைப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பு, வேலைவாய்ப்பு தேடும் பெண்கள், குடும்ப வருமானத்தை உயர்த்த விரும்பும் இல்லத்தரசிகள் மற்றும் சுயதொழில் தொடங்க துடிப்பவர்களுக்குக் கிடைத்த வரமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் பயிற்சி வரும் 20ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை மொத்தம் 31 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியின் முக்கிய சிறப்பு என்னவென்றால், பயிற்சி கட்டணம், சீருடை மற்றும் உணவு என அனைத்தும் முழுமையாக இலவசம் என்பதுதான். இதனால், பொருளாதாரச் சுமை இன்றி, பெண்கள் தன்னம்பிக்கையுடன் பயிற்சியில் கலந்துகொள்ள முடியும். மேலும், பயிற்சி நிறைவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படுவது, எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் தொடங்குவதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
வருமானம் ஈட்ட வழிகாட்டும் பயிற்சி :
இந்த தையற்கலை பயிற்சியில், அடிப்படைத் தையல் நுணுக்கங்கள் முதல் மேம்பட்ட அளவிலான தையல் திறன்கள் வரை முழுமையாகக் கற்றுத்தரப்பட உள்ளன. பெண்கள் அணியும் உடைகள், பிளவுஸ், சுடிதார், யூனிஃபாரம் மற்றும் ஆல்டரேஷன் போன்ற வேலைகளைச் செய்யும் பயிற்சி முறையாக வழங்கப்படும். இதன் மூலம், பயிற்சியை முடித்தவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே தையல் தொழிலைத் தொடங்கி, மாதத்திற்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை நிலையான வருமானம் ஈட்டும் நிலைக்கு உயர முடியும்.
இந்தப் பயிற்சியில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், சுயதொழில் வாய்ப்பையும் ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வீட்டிலிருந்தே வேலை செய்து குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். ஆர்வமுள்ள பெண்கள், தாமதிக்காமல் முன்பதிவு செய்ய, 87783 23213, 72006 50604, 0424-2400338 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Read More : கணவர் கண்முன்னே காட்டுக்குள் வைத்து மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர்..!! தூத்துக்குடியில் துயரம்..!!



