உலகின் பணக்காரர் பட்டியலில் முன்னணியில் உள்ள எலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனேர் (1 டிரில்லியன் டாலர் சொத்து கொண்ட நபர்) ஆக மாறும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ( SpaceX), சுமார் 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டில் (valuation) ஆரம்ப பொது பங்குச் சந்தை வெளியீடு (IPO) செய்ய திட்டமிட்டுள்ளதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
Forbes இதழ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, எலான் மஸ்க் தற்போது 600 பில்லியன் டாலரை கடந்த சொத்து மதிப்பைக் கொண்ட முதல் நபர் ஆவார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் புதிய மதிப்பீடு 800 பில்லியன் டாலராக உயர்ந்ததன் மூலம், மஸ்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் 168 பில்லியன் டாலர் அதிகரித்து, 677 பில்லியன் டாலராக (இந்திய நேரப்படி திங்கள்கிழமை பிற்பகல் 12 மணி நிலவரப்படி) உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டில் IPO மேற்கொண்டால், எலான் மஸ்க் டிரில்லியனேர் ஆக மாறுவது உறுதி என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, ப்ளூம்பெர்க் கடந்த வாரம் வெளியிட்ட செய்தியில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2026 நடுப்பகுதி அல்லது இறுதியில் IPOக்கு தயாராகி வருவதாக தெரிவித்தது. சந்தை சூழ்நிலையைப் பொறுத்து இந்த IPO 2027க்கு தள்ளிப் போகும் வாய்ப்பும் உள்ளது என கூறப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வருமானம் 2025ல் 15 பில்லியன் டாலராகவும், 2026ல் 22–24 பில்லியன் டாலராகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும்பங்கு ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவையிலிருந்தே வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சரியாக இருக்கலாம் என எலான் மஸ்க் தனது X பதிவில் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஃபோர்ப்ஸ் மதிப்பீடுகள்
ஃபோர்ப்ஸ் கணிப்பின்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் மஸ்க் வைத்துள்ள 336 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்கு தற்போது அவரது மிக மதிப்புமிக்க சொத்தாக உள்ளது. அதனைத் தொடர்ந்து, பொது பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் Tesla நிறுவனத்தில் அவர் வைத்துள்ள 12% பங்கு (2018 பங்கு விருப்பத் திட்டம் தொடர்பான நீதிமன்ற சர்ச்சையை தவிர்த்து) சுமார் 197 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள், குறிப்பிட்ட செயல்திறன் இலக்குகளை மஸ்க் எட்டினால், அவருக்கு 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சம்பளத் தொகுப்பை வழங்க நவம்பரில் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் டெஸ்லா மூலமாகவும் மஸ்க் டிரில்லியனேர் ஆகும் வாய்ப்பு உள்ளது. எலான் மஸ்க் முன்பக்கத்தில் பாதுகாப்பு கண்காணிப்பாளர் இல்லாமல் ரோபோ டாக்ஸி (robotaxi) சோதனை நடத்தப்படுவதாக அறிவித்ததையடுத்து, திங்கள்கிழமை டெஸ்லா பங்குகள் 4% உயர்வுடன் முடிந்தன.
xAI மற்றும் பிற சொத்துகள்
மஸ்க் 52% பங்கு வைத்துள்ள xAI நிறுவனமும் தற்போது 230 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புதிய முதலீட்டை திரட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 2024 டிசம்பரில் 400 பில்லியன் டாலரை எட்டியது. அதற்கு முன் அக்டோபரில் 500 பில்லியன் டாலரை கடந்தது. இதன் மூலம், Oracle நிறுவனர் லாரி எலிசன் (400 பில்லியன் டாலர் கடந்த ஒரே மற்ற நபர்) ஆகியோரை மஸ்க் பின்னுக்குத் தள்ளியுள்ளார். தற்போது, Google இணை நிறுவனர் லாரி பேஜ் சுமார் 252 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.



