சூரியனை ஆய்வுசெய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், இன்று மாலை எல் 1 புள்ளியை சென்றடைகிறது.
சூரியனை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆதித்யா எல் 1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த செப்.2ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து புவி வட்டபாதையில் 5 சுற்றுகளை முடித்த ஆதித்யா விண்கலம் பூமியை சுற்றி முடித்த பின் தன் இலக்கை நோக்கி பயணத்தை கடந்த செப்.19ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியனின் எல்-1 பகுதியை நோக்கிய தனது பயணத்தின் இறுதிகட்டத்தில் ஆதித்யா விண்கலம் உள்ளது. தற்போதைய சூழல்களின்படி எல்-1 சுற்றுப்பாதையில் விண்கலம் (ஜனவரி 6-ம் தேதி) இன்று மாலை 4 மணிக்கு செலுத்தப்பட உள்ளது. அதன்பின் ஆதித்யா விண்கலம் எல்-1 பகுதியை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் (Halo Orbit) நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். எல் 1 புள்ளியை விண்கலம் சென்றடைவது சவாலான பணி என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுற்றுவட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்து ஆதித்யா ஆய்வு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.