சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், இன்று எல் 1 புள்ளியை சென்றடைகிறது.
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, புவி வட்டபாதையில் 5 சுற்றுகளை முடித்த விண்கலம், பூமியை சுற்றி முடித்த பின் தன் இலக்கை நோக்கிய பயணத்தை கடந்த செப்.19ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியனின் எல்-1 பகுதியை நோக்கிய தனது பயணத்தின் இறுதிகட்டத்தில் ஆதித்யா விண்கலம் உள்ளது. அந்தவகையில், எல்-1 சுற்றுப்பாதையில் விண்கலம் இன்று (ஜனவரி 6) செலுத்தப்பட உள்ளது. பின் ஆதித்யா விண்கலம் எல்-1 பகுதியை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். எல் 1 புள்ளியை விண்கலம் சென்றடைவது சவாலான பணி என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுற்றுவட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்து ஆதித்யா ஆய்வு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனராக தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் பணியாற்றியிருந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குனராக தென்காசியை சேர்ந்த நிகர் ஷாஜி பணியாற்றியுள்ளார். 59 வயதாகும் இவர், செங்கோட்டையில் பிறந்தவர். அங்குள்ள அரசுப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் பயின்றுள்ளார். நெல்லையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இஞ்சினியரிங் படித்துள்ளார்.
பின்னர், பிர்லா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் மேல் படிப்பை முடித்து, 1987ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். இப்போது பெங்களூருவில் தாய் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவரது குடும்பமே ஒரு அறிவியல் குடும்பம் எனலாம். ஷாஜியின் கணவர் வளைகுடா நாடுகளில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மகன் நெதர்லாந்தில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். பணி நிமித்தமாக உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்து பல்வேறு விஞ்ஞானிகளுடன் வேலை செய்துள்ளார். இப்போது ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநராக இருக்கிறார் நிகர் ஷாஜி.