தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த சரளைப் பகுதியில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் பங்கேற்கும் இந்த நிகழ்விற்காக ஒட்டுமொத்த கொங்கு மண்டலமும் த.வெ.க தொண்டர்களின் வருகையால் திணறி வருகிறது.
இன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ள இந்தப் பொதுக்கூட்டத்திற்காக சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான திடல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 60 ஏக்கர் கார்களுக்கும், 20 ஏக்கர் இருசக்கர வாகனங்களுக்கும் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு வாகன நிறுத்தம் தயார் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு நுழைவுச் சீட்டு (Pass) அல்லது கியூஆர் கோடு (QR Code) முறை பின்பற்றப்படும். ஆனால், இன்றைய கூட்டத்திற்கு அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டதே கூட்டத்தின் அலைமோதலுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக, நள்ளிரவு 12 மணி முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் பேருந்துகள் மற்றும் வேன்கள் மூலம் வரத் தொடங்கினர்.
அதிகாலை 6 மணி நிலவரப்படி, சரளைப் பகுதி முழுவதும் த.வெ.க தொண்டர்களால் நிரம்பி வழிகிறது. விடிய விடியக் குவிந்த தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டு வருவதால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு இன்னும் சில மணிநேரங்கள் உள்ள நிலையில், தொண்டர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் தான், தன்னுடன் தொடர்பில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்க செங்கோட்டையன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அமமுகவில் இருக்கும் நிர்வாகிகளையும் தவெகவில் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் அதிர்ச்சியில் உள்ளனர்.



