மாறிவரும் நிதித் தேவைகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால், பொதுமக்கள் சேமிப்பின் அவசியத்தை அதிகமாக உணரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்தே சிறு தொகையாக சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பல நிறுவனங்கள் கவர்ச்சிகரமான சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், முன்னணி பொதுத்துறை நிறுவனமான தபால் அலுவலகம் வழங்கும் சேமிப்புத் திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பாதுகாப்பு, நிலையான வருமானம், அரசு உத்தரவாதம் ஆகிய காரணங்களால் தபால் அலுவலக திட்டங்கள் நம்பகமான முதலீடாக பார்க்கப்படுகின்றன.
தபால் அலுவலகம் வழங்கும் RD (Recurring Deposit – தொடர் வைப்புத் திட்டம்) என்பது, ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை சேமிக்க அனுமதிக்கும் திட்டமாகும். இதில் முதலீடு செய்வதன் மூலம், சிறு தொகையை ஒழுங்காக சேமித்து, முதிர்வு காலத்தில் பெரிய தொகையை பெற முடியும்.
முதிர்வு காலம் மற்றும் பணம் எடுத்தல்
- இந்த RD திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்
- 5 ஆண்டுகள் முடிந்த பின், நீங்கள் செலுத்திய முழுத் தொகையும் வட்டியுடன் திருப்பித் தரப்படும்
- அவசர தேவைக்காக 3 ஆண்டுகள் முடிந்த பிறகு முன்பே பணம் எடுக்கலாம்
- ஆனால், இதனால் வட்டியில் சிறிதளவு குறைப்பு ஏற்படும்
- முதிர்வு காலம் முடிந்ததும், விரும்பினால் மேலும் ஒரு வருடத்திற்கு கணக்கை நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது
வட்டி விகிதம் எவ்வளவு?
- தற்போது தபால் அலுவலக RD திட்டத்திற்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது.
- இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
- அரசு நிர்ணயிக்கும் வட்டி என்பதால், சந்தை ஏற்ற இறக்கங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
கூடுதல் சிறப்பம்சங்கள்:
- ஒரே நேரத்தில் அதிகபட்சம் 6 மாத தவணை தொகையை முன்பே செலுத்தலாம்
- சிறு தொகையிலேயே சேமிப்பை தொடங்க முடியும்
- அரசு உத்தரவாதம் இருப்பதால், முதலீட்டிற்கு முழு பாதுகாப்பு
- நடுத்தர வர்க்கம் மற்றும் சம்பளதாரர்களுக்கு ஏற்ற திட்டம்
17 லட்சம் சம்பாதிப்பது எப்படி? உதாரணமாக, நீங்கள் தபால் அலுவலக RD திட்டத்தில் மாதம் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் முதலீடு 5 ஆண்டுகளுக்கு ரூ. 6 லட்சமாக இருக்கும். 6.7 சதவீத வட்டி விகிதத்தில், உங்களுக்கு ரூ. 1,13,600 வரை வட்டி கிடைக்கும். இதன் மூலம், 5 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பிறகு, உங்களுக்கு மொத்தம் ரூ. 713600 கிடைக்கும். இருப்பினும், உங்கள் சேமிப்புத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக வைத்துக்கொள்வோம்.
அப்போது உங்கள் மொத்த முதலீடு ரூ.12 லட்சமாக இருக்கும். வட்டி ரூ.5,08,546. மொத்த தொகை ரூ.17,08,546. இந்த வழியில், பத்து ஆண்டுகளில் ரூ.17 லட்சமாக சம்பாதிக்கலாம். அதுவும் எந்த ஆபத்தும் இல்லாமல். ஒவ்வொரு மாதமும் சிறிது சேமித்து, எதிர்காலத் தேவைகளுக்காக பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த தேர்வாகக் கூறலாம். இந்தத் திட்டம் பற்றிய முழுமையான விவரங்களுக்கு, உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தைப் பார்வையிடவும்.



