உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் நுகர்வோர் நாடாக திகழும் இந்தியா, தனது தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக, இந்திய குடும்பங்களின் அன்றாட தேவையான பாமாயிலுக்கு நாம் வெளிநாடுகளையே பெரிதும் சார்ந்துள்ளோம். இந்தச் சூழலில், சர்வதேசச் சந்தையில் நிலவும் விலை மாற்றங்களைப் பயன்படுத்தி, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தற்போது பாமாயில் கொள்முதலைத் தீவிரப்படுத்தியுள்ளன.
பாமாயில் இறக்குமதியில் 5% உயர்வு :
சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (SEA) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது நவம்பர் மாதத்தில் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, ஒரே மாதத்தில் சுமார் 6,32,341 மெட்ரிக் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. விலை குறைவைச் சாதகமாக பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் ஆர்டர் செய்ததே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
சரிவை கண்ட சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் :
பாமாயில் இறக்குமதி அதிகரித்துள்ள அதே வேளையில், மற்ற சமையல் எண்ணெய்களின் இறக்குமதி கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, சோயா எண்ணெய் இறக்குமதி 18 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி சுமார் 45 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன. சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியானது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1,42,953 டன்களாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்களால் இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி முந்தைய மாதத்தை விட 13.3 சதவீதம் சரிந்துள்ளது.
இந்த முறை இந்தியா தனது இறக்குமதி உத்தியில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது. வழக்கமாக சோயா எண்ணெய்க்காகத் தென் அமெரிக்க நாடுகளைச் சார்ந்திருக்கும் இந்தியா, இந்த முறை சீனாவிலிருந்து சுமார் 69,919 டன் சோயாபீன் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து (UAE) 5,000 டன் கனோலா எண்ணெயும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஏன் பாமாயிலை நோக்கி இந்தியா திரும்புகிறது..?
சந்தை நிலவரப்படி, ஒரு டன் பாமாயிலின் விலையானது சோயா எண்ணெயை விட 100 டாலர்களும், சூரியகாந்தி எண்ணெயை விட 200 டாலர்களும் குறைவாக உள்ளது. இந்த மாபெரும் விலை வித்தியாசத்தால், இந்திய வியாபாரிகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சோயா எண்ணெய் ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, அந்த இடங்களில் பாமாயிலை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் நிலவும் சாதகமான வானிலை காரணமாக பாமாயில் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் உலகச் சந்தையில் அதன் வரத்து அதிகமாகி விலை குறைந்துள்ளதால், விரைவில் இந்தியச் சந்தையிலும் சமையல் எண்ணெய் விலைகள் கணிசமாக குறையும் என்று நுகர்வோர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Read More : ஆன்மீக பயணம் சென்று வந்த பின் உடல்நிலை சரியில்லாமல் போகிறதா..? ஆச்சரியமான தகவல்கள்..!!



