தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’, தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்டமாக சமய நல்லிணக்க நிகழ்வுகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், நாளை (திங்கட்கிழமை) செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ‘ஃபோர் பாயிண்ட்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் தவெக சார்பில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது. கட்சி தொடங்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மதச்சார்பற்ற பொது நிகழ்வு இது என்பதால், அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விழாவில் கட்சியின் தலைவர் விஜய் நேரில் பங்கேற்றுச் சிறப்புரையாற்ற உள்ளார். சமீபகாலமாக விஜய் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமைந்து வரும் நிலையில், இந்த விழாவில் அவர் முன்வைக்கப்போகும் அரசியல் கருத்துக்கள் என்னவாக இருக்கும் என்பதை அறிய அரசியல் பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக, சிறுபான்மையின மக்களின் நலன்கள் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என தெரிகிறது.
பாதுகாப்பு மற்றும் இடவசதியைக் கருத்தில் கொண்டு, இந்த விழாவில் பங்கேற்க சுமார் 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அனுமதி சீட்டு வழங்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தவெக தலைமை அறிவித்துள்ளது. விழாவின் ஒரு பகுதியாக, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்க உள்ளார். கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட மக்கள் நலப்பணிகளுக்கு இவ்விழாவில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
Read More : கள்ளக்காதலியாக மாறிய முன்னாள் காதலி..!! பணத்திற்காக பலருடன் உல்லாசம்..!! காதலன் செய்த பயங்கரமான செயல்..!!



