சபரிமலையில் ஐயப்ப பக்தர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கும் போக்கு தொடர்ந்து வருவது பக்தர்களிடம் மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று நடைபெற்ற தாக்குதலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்களுக்கு காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருவது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மகர விளக்கு மற்றும் மண்டல விளக்கு சீசனில் ஐயப்பன் சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களுக்கு காவல்துறையினர் தொடர்ந்து நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாக பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை காவல்துறையினர் நீண்ட நேரம் காக்க வைக்கின்றனர். இதனால் சுவாமி தரிசனத்திற்கு தாமதமாவதால் பலரும் பாதியிலேயே வீடு திரும்பும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த 32 பக்தர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டு ஊர் திரும்பிய சம்பவமும் நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்.
அவர் தனது நண்பனின் ஆறு வயது மகனுடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக 18-வது படியில் ஏறிக்கொண்டிருந்த போது காவல்துறையினர் அவரை தாக்கி இருக்கின்றனர். இதில் ராஜேஷ் என்ற அந்த பக்தரின் முதுகில் பயங்கர காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த பக்தர் சன்னிதானம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக தேவசம் போர்டு நிர்வாகிகள் மற்றும் காயம் அடைந்த பக்தரின் உறவினர்கள் ஆகியோர் சன்னிதான எஸ்பி இடம் புகார் தெரிவித்துள்ளனர்.