தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகின்றன. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்தத் தேர்வுகள், 9ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டன. ஏற்கனவே தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று பிற வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவுக்கு வருகின்றன.
தேர்வுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. நாளை தொடங்கி அடுத்த மாதம் (ஜனவரி) 4-ம் தேதி வரை மொத்தம் 12 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 5-ம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளையும் (Special Classes) நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வுகள் முடிந்து ஓய்வில் இருக்கும் மாணவர்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடாது என்பதே இந்த உத்தரவின் நோக்கம்.
அதேசமயம், மாணவர்களின் ஆக்கப்பூர்வமான திறன்களை ஊக்குவிக்கப் பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய ஆலோசனையை வழங்கியுள்ளது. விடுமுறை நாட்களில் இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகளில் ஆர்வம் கொண்ட மாணவர்கள், அவற்றை முறைப்படிக் கற்றுக்கொள்ளத் தேவையான வாய்ப்புகளையும் சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் விடுமுறை காலத்தைப் பயனுள்ளதாகவும், மனஅழுத்தமற்றதாகவும் மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.



