தமிழக அரசியலில் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 27-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், இவ்விழாவிற்கு மலேசிய அரசு சில அதிரடியான மற்றும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மலேசிய அரசின் உத்தரவின்படி, இந்த இசை வெளியீட்டு விழா முழுக்க முழுக்க திரைத்துறை சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே அமைய வேண்டும். அரசியல் வாடை ஏதுமின்றி நடைபெற வேண்டிய இந்த விழாவில், மேடையிலோ அல்லது அரங்கத்திலோ யாரும் அரசியல் கருத்துகளைப் பகிரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரசிகர்கள் யாரும் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சிச் சின்னம் பொறித்த உடைகள் அல்லது துண்டுகளை அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலேசியத் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விஜய் தனது திரைப்பயணத்தை முடித்துக்கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்வதால், இப்படத்தின் மீது ரசிகர்களிடையே இமாலய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’ ஆகிய பாடல்கள் இணையத்தில் சாதனைகளைப் படைத்து வருகின்றன.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படம், வெளியாவதற்கு முன்பே சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வணிகம் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விழாவில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் மற்றும் அட்லீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளதாக தெரிகிறது. மலேசிய அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், தனது அரசியல் எதிர்காலம் குறித்து விஜய் இந்த மேடையில் ஏதேனும் சூசகமான அறிவிப்புகளை வெளியிடுவாரா என்று அவரது தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : உஷார்..!! இந்த 3 செயலிகள் உங்கள் போனில் இருக்கா..? வங்கிக் கணக்கு காலி ஆகலாம்..!! அரசு எச்சரிக்கை..!!



