தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய், தனது அரசியல் வருகையின் மூலம் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்துள்ளார். பல ஆண்டுகளாக நிலவி வந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த 2024 பிப்ரவரி 2-ஆம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) எனும் கட்சியை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை சமூகப் பணிகளிலிருந்து அரசியல் சக்தியாக மாற்றிய அவர், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஒருசேர சவால் விடுத்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலைப் புறக்கணித்து, முழு கவனத்தையும் மாநில அரசியலில் செலுத்தியது அவரது அரசியல் முதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
விஜயின் அரசியல் தத்துவங்கள் தமிழகத்தின் திராவிட மற்றும் தேசிய நீரோட்டத்தின் கலவையாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றைத் தனது கட்சியின் தூண்களாக அறிவித்த அவர், பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜர் ஆகியோரை தனது கொள்கை வழிகாட்டிகளாக முன்னிறுத்தியுள்ளார்.
குறிப்பாக, பாஜகவை சித்தாந்த ரீதியிலான எதிரியாகவும், திமுகவை அரசியல் ரீதியிலான எதிரியாகவும் பிரகடனப்படுத்தி, தமிழக அரசியலில் நிலவும் வழக்கமான இருதுருவ அரசியலுக்கு மாற்றாகத் தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார்.
இந்நிலையில், விஜயின் இந்த துணிச்சலான முடிவிற்கு அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன. ‘ஈ’ படத்தின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமான கன்னட நடிகர் கிச்சா சுதீப், விஜயின் அரசியல் பிரவேசத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். “சினிமாவில் ஒரு உச்சத்தில் இருக்கும்போதே, அந்தப் புகழையும் வசதியையும் துறந்துவிட்டு மக்கள் சேவைக்காக வருவது சாதாரண காரியமல்ல; அதற்குத் தனித்துணிச்சல் வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். விஜயின் இந்த அர்ப்பணிப்பு சமூக மாற்றத்திற்கான விதையாக அமையும் என்றும், அவரது தலைமைக்குத் தனது முழு ஆதரவு உண்டு என்றும் சுதீப் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Read More : தமிழக அரசியலில் பரபரப்பு..!! கைதாகிறார் அமைச்சர் சிவசங்கர்..? திமுக தலைமை அதிர்ச்சி..!!



