தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக இடையே நிலவி வந்த இருமுனைப் போட்டி, தற்போது நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அக்கட்சியில் இணைந்தது முதல், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளைத் தனது புதிய பாசறைக்கு இழுக்கும் பணிகளில் அவர் பம்பரமாகச் சுழன்று வருகிறார்.
இந்தச் சூழலில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே அதிமுகவிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் சூசகமாகப் பேசிய அவர், பண்டிகைக்குள் பெரிய மாற்றங்கள் நிகழும் என பலத்த ‘சஸ்பென்ஸ்’ ஒன்றையும் உடைத்துள்ளார்.
ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்குப் பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது செங்கோட்டையனின் இந்த அதிரடிப் பேட்டி அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
விஜய்யின் அரசியல் வியூகங்களும், செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களின் சேர்க்கையும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் வரவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.



