செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி அதிரடியான பல வாக்குறுதிகளை அள்ளிவீசினார். அதிமுக என்பது எளிய மக்களுக்காகவே உருவான பேரியக்கம் என்று புகழாரம் சூட்டிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டு, தற்போது திமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் முக்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
குறிப்பாகப் பெண்களைக் கவரும் வகையில், அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ‘தாலிக்குத் தங்கம்’ வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் திருமண நிதியுதவித் தொகை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதேபோல், கடந்த அதிமுக ஆட்சியில் மிகவும் வரவேற்பைப் பெற்ற மானிய விலையிலான இருசக்கர வாகன திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்றும், இம்முறை சுமார் 5 லட்சம் பெண்களுக்குப் புதிய ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், கல்வித் துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களை செய்யப்போவதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நவீன கல்வித் தேவைக்காக விலையில்லா மடிக்கணினிகள் மீண்டும் விநியோகிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முழு வீச்சில் புத்துயிர் பெறும் என அவர் முழங்கியது, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



