தமிழக உயர்கல்வித் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சென்னைப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அதிகாரப்பூர்வமாக திருப்பி அனுப்பியுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, சுமார் 3 ஆண்டுகால இழுபறிக்குப் பிறகு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதிலும், நீக்குவதிலும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்திருத்தம், தற்போது மத்திய அரசின் முட்டுக்கட்டையால் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழக அரசு கொண்டு வந்த இந்த மசோதாவின்படி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பெற்று அரசுக்கு அளிக்கவும், பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவில் நிதித்துறைச் செயலாளரை உறுப்பினராக இணைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதாவை ஆய்வு செய்த தமிழக ஆளுநர், கல்வித்துறை என்பது மத்திய-மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் வருவதைச் சுட்டிக்காட்டி, இறுதி முடிவிற்காக இதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.
நீண்ட நாட்களாக ஜனாதிபதி மாளிகையில் நிலுவையில் இருந்த இந்த மசோதா, தற்போது எவ்வித ஒப்புதலும் இன்றி மாநில சட்டத்துறையிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பிற முக்கியப் பல்கலைக்கழகங்களான பாரதியார், பெரியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட இதே போன்ற சட்டத் திருத்த மசோதாக்களின் நிலையும் இப்போது ஊசலாட்டத்தில் உள்ளது.
அந்த மசோதாக்களின் முடிவு என்ன என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசின் அதிகார வரம்பு மற்றும் ஆளுநரின் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கு இடையே நிலவும் இந்த மோதல் போக்கு, தமிழக உயர்கல்வித் துறையில் புதிய அரசியல் விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது.



