உத்தரப் பிரதேசத்தின் புடான் மாவட்டத்தில் உள்ள பிப்ரௌலி கிராமத்தில், நாய் கடித்த ஒரு எருமையின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட தயிரை சாப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 200 பேர் வெறிநாய் கடி தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கிராம மக்கள் டிசம்பர் 23 அன்று கிராமத்தில் நடந்த ஒரு துக்க நிகழ்வில் அந்த தயிரில் செய்த சாப்பிட்டதாகவும், அந்த உணவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பால் கொடுத்த எருமையை சில நாட்களுக்கு முன்பு ஒரு நாய் கடித்தது பின்னர் தெரியவந்ததாகவும் கூறினர். அந்த எருமை டிசம்பர் 26 அன்று வெறிநோய் அறிகுறிகளால் இறந்ததால், கிராமத்தில் பீதி ஏற்பட்டது.
சுமார் 200 கிராம மக்கள் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள உஜ்ஹானி சமூக சுகாதார மையத்திற்குச் சென்றனர். இதே நோக்கத்திற்காக, அந்த ஆரம்ப சுகாதார நிலையம்/சமூக மையம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் திறந்தே வைக்கப்பட்டிருந்தது.
முதலமை மருத்துவ அதிகாரி டாக்டர் ரமேஷ்வர் மிஸ்ரா பேசிய போது “ கிராமத்தில் ஒரு எருமையை வெறிநாய் கடித்ததாகவும், அது வெறிநோய் அறிகுறிகளால் இறந்ததாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது.. முன்னெச்சரிக்கையாக, அனைவரும் வெறிநாய் கடி தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
வருமுன் காப்பதே சிறந்தது. சந்தேகம் இருந்த அனைவருக்கும் வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்டது. பொதுவாக, பாலைக் காய்ச்சிய பிறகு வெறிநோய் ஏற்படும் அபாயம் இல்லை, ஆனால் ஏற்படக்கூடிய எந்தவொரு அபாயத்தையும் தடுக்கவே இந்தத் தடுப்பூசி போடப்பட்டது..” என்று கூறினார்.
கிராமவாசி ஜசோதா தேவி இதுகுறித்து பேசிய போது “ கிராமத்தில் ஒரு ‘தேர்வி’ (13-ஆம் நாள் சடங்கு விருந்து) நடந்ததாகவும், அப்போது அனைவரும் ராய்தா சாப்பிட்டதாகவும் கூறினார். பின்னர், எருமையின் மரணம் மற்றும் அதை ஒரு நாய் கடித்தது பற்றிய செய்தி வெளியானதும், கிராம மக்கள் பயந்து முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்றனர்.
மற்றொரு கிராமவாசியான கௌஷல் குமார், அந்த எருமையை ஒரு வெறிநாய் கடித்ததாகவும், ஆனால் அந்த நேரத்தில் இது தெரியாததால், அதன் பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிரைக் கொண்டு ராய்தா தயாரிக்கப்பட்டதாகவும் கூறினார். தேர்வி நிகழ்ச்சியில் ராய்தா சாப்பிட்ட பிறகு, கிராம மக்களுக்கு சாத்தியமான உடல்நல அபாயங்கள் குறித்து கவலை ஏற்பட்டதாகவும், இது பலரை தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தூண்டியதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, கிராமத்தில் எந்த நோயும் பதிவாகவில்லை என்றும், நிலைமை முற்றிலும் சாதாரணமாகவே இருப்பதாகவும் சுகாதார துறை தெளிவுபடுத்தியுள்ளது. வதந்திகள் அல்லது தேவையற்ற பீதி பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக அந்தப் பகுதி கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More : உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 7 பேர் பலி என அச்சம்; தொடரும் மீட்புப் பணிகள்..



