கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபூர் பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண், தனது குழந்தையின் எதிர்காலத்திற்காக மறுமணம் செய்ய மறுத்ததால், காதலனால் கழுத்தறுத்து கொல்லப்பட்டதும், பின்னர் அந்த நபரும் தற்கொலை செய்துகொண்டதும் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது.
எல்லாபூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா (30) என்பவருக்கும் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தனது கணவரைப் பிரிந்த ரஞ்சிதா, தாய் வீட்டில் தங்கி அரசுப் பள்ளியில் சத்துணவு மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்த சூழலில் தான், அதே பகுதியை சேர்ந்த ரஃபீக் என்ற வாலிபருடன் ரஞ்சிதாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான ரஃபீக், தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தவர். நாளடைவில் இவர்களது பழக்கம் நெருக்கமாக மாறவே, ரஞ்சிதாவை திருமணம் செய்துகொள்ள ரஃபீக் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரஞ்சிதாவின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஃபீக்கோ, “குழந்தையை விட்டுவிட்டு என்னுடன் வந்துவிடு, உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்” என வற்புறுத்தியுள்ளார். ஆனால், தனது குழந்தையின் எதிர்காலமே முக்கியம் என முடிவெடுத்த ரஞ்சிதா, ரஃபீக்குடனான திருமணத்தை தவிர்த்ததோடு, அவரிடம் பேசுவதையும் நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஃபீக், ரஞ்சிதாவைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று வேலை முடிந்து ரஞ்சிதா நடந்து வந்து கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த ரஃபீக் மீண்டும் திருமணத்திற்கு சம்மதிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ரஞ்சிதா உறுதியாக மறுக்கவே, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரஞ்சிதாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து தலைமறைவான ரஃபீக்கை தேடி வந்த போலீசார், அருகிலுள்ள காட்டுப் பகுதியில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிணமாக மீட்டனர். ஒரு குழந்தையின் தாய் கொல்லப்பட்டதும், கொலையாளி தற்கொலை செய்துகொண்டதும் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Read More : அதிமுக கூட்டணியில் இணைந்த மேலும் 2 கட்சிகள்..!! எடப்பாடிக்கு கூடும் ஆதரவு..!! குஷியில் நிர்வாகிகள்..!!



